“கடினமான பாதை தான் உங்களை அழகான இடத்துக்கு கொண்டு சேர்க்கும்!” – பார்த்திபன்

பார்த்திபன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. இப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யா இசை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்களை டிசம்பர் 4ஆம் தேதியும், படத்தை டிசம்பர் 23ஆம் தேதியும் வெளியிட இருப்பதாக பார்த்திபன் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை நான் க்ரவுடு ஃபண்டிங் மூலமாக உருவாக்கி இருக்கிறேன். நிறைய தயாரிப்பாளர்கள் இந்த மாதிரி செய்யலாம், அந்த மாதிரி செய்யலாம் என வருவார்கள். காசோலை கொடுப்பார்கள். நானும் எதாவது ஒன்றிலாவது தப்பித்தவறி பணம் வந்துவிடும் என பார்ப்பேன். ஆனால், எல்லா காசோலையுமே பணமின்றி திரும்பிவிடும். அதனால் தான் இந்த க்ரவுடு ஃபண்டிங் முறையைத் தேர்வு செய்தேன். இதன் மூலம் பத்து பேர் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இது ஒரு ஆரோக்கியமான விஷயம் என நினைக்கறேன்.

இந்த படத்தில் சாந்தனுவை கதாநாயகனாக ஆக்குவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. இதற்கு முன் நான் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சாந்தனுவை அழைத்திருந்தேன். அப்போது, அவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்க வந்த ராகவா லாரன்ஸ், சாந்தனுவின் நடனம் மற்றும் அவருடைய ஸ்டைல் எல்லாம் பார்த்து அவரை வைத்து ஒரு படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று என்னிடம் கூறினார்.

மேலும், என்னுடைய குரு பாக்யராஜ் சாருக்காக எதையாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதை சாந்தனுவுக்கு செய்தால், அவர் மூலமாக பாக்யராஜ் சாரை சென்றடையும் என்பதாலும் தான் இந்த படத்திற்கு சாந்தனுவை கதாநாயகனாக தேர்வு செய்தேன்.

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் நன்றாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் இப்போது சில படங்களில் நடிக்கிறேன், நல்ல சம்பளம் வருகிறது. ஆனால் படம் இயக்கும் ஆசை மட்டும் போகவில்லை. சொகுசாக வாழ்வதற்குப் பிடிக்கவில்லை. எப்போதுமே ஒரு கடினமான பாதைதான் உங்களை அழகான இடத்துக்கு கொண்டு சேர்க்கும்.

எனக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒரேயொரு வேண்டுகோள் தான். இது இன்றைய நேற்றைய பிரச்சினை இல்லை. பல நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். விழா நாட்களில் பெரிய நாயகர்கள் படம் வெளியாவதற்குப் பதிலாக, சின்ன படங்கள் வெளியாக வழி செய்தால் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் அஜித் படத்தை செவ்வாய்க்கிழமை வெளியிட்டால்கூட நான் திரையரங்கிற்கு சென்று பார்ப்பேன். ஆனால் சிறு படங்களின் நிலை அப்படியில்லை.

இவ்வாறு பார்த்திபன் கூறினார்.