“தமிழக அரசியலின் அவலம் தே.மு.தி.க.!” – சுப.உதயகுமாரன்

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்கள். தமிழக அரசியலின் அவலநிலையைப் புரிந்துகொள்ள தே.மு.தி.க. என்கிற ஒரு கட்சியை அவதானித்தாலே போதும்.

கொள்கை என்பது அறவே கிடையாது. தேசியம், முற்போக்கு, திராவிடம் என மனதிற்கு தோன்றிய வெறும் வார்த்தைகளை போட்டுக் குழப்பி ஒரு சொற்றொடரை உருவாக்கி, தமிழர்களுக்கு பண்ருட்டியார் போன்றோர் சேர்ந்தளித்த மாபாதகப் பரிசுதான் இந்தக் கட்சி. “இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே” என்பதுதான் இவர்கள் நாட்டுக்கு வழங்கியிருக்கும் மார்க்சிசத்துக்கு அடுத்த மாபெரும் தத்துவம்!

நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எந்தவிதமானத் திட்டமும் இந்தக் கட்சியிடம் கிடையாது. ஆட்சிக்கு வந்தால்தான் திட்டங்களை அறிவிப்பார்களாம், நடைமுறைப்படுத்துவார்களாம். இப்போதே சொன்னால் மற்றவர்கள் அந்தத் திட்டங்களை செய்துவிடக் கூடாதே என்கிற நல்லெண்ணம்தான் இந்த இரகசியத்துக்குக் காரணமாம்.

தலைவர், தலைவரின் மனைவி, மனைவியின் தம்பி எனும் முப்பெரும் தலைவர்களைக் கொண்டியங்கும் இந்தக் கட்சி தமிழகத்தின் மூன்றாவது பெரிய (குடும்பக்) கட்சி. முதல்வர் பதவி, மத்திய அமைச்சர் பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி போன்ற பதவிகளை மேற்கண்ட குடும்பத் தலைவர்கள் பெற்றுவிட்டால் எட்டுக் கோடி தமிழர்களும் ஜென்ம சாபல்யம் அடைந்துவிடுவோம்.

தமிழ் மக்கள் (வேறுவழியின்றி) கொடுத்த எதிர்க்கட்சித் தகுதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவியை தமிழ் மக்களின் நலத்துக்காக, நல்வாழ்வுக்காக பயன்படுத்தும் அறிவோ, திறமையோ, உறுதியோ, தொலைநோக்குப் பார்வையோ எதுவும் இன்றி வீணாக்கித் தொலைத்தவர்கள் இந்தக் கட்சியினர். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

சந்தர்ப்பவாதமும், பிழைப்புவாதமும், சுயநலவாதமும், வியாபார நுணுக்கமும், பேரப்பேச்சுத் திறமையும்தானே கைவசம் இருக்கின்றன? ஒரே நேரத்தில் எதிரும் புதிருமான காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது; யார் அதிகம் தருகிறார்களோ அவர்களோடு கூட்டணி அமைத்துக்கொள்வது. இது 2014 காட்சி.

தற்போது தி.மு.க.வுடன் நடக்கும் பேரத்தில் அதிகம் பலன்பெறும் பொருட்டு, மற்ற கட்சி/கூட்டணித் தலைவர்களோடும் தே.மு.தி.க.வினர் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்தக் கொள்கைக் குன்றோடு கூட்டணி வைத்துக்கொள்ள பல கட்சிகளின்/கூட்டணிகளின் தலைவர்களும் கால்கடுக்க கோயம்பேடு பகுதியில் சுற்றித் திரிகின்றனர்.

பகுத்தறிவுப் பாசறையிலிருந்து புறப்பட்டிருக்கும் “திராவிட” கட்சியான தே.மு.தி.க.வுக்கு 5 எனும் எண்தான் ராசியானதாம். எனவே 50 அல்லது 500 சீட் கிடைத்தால்தான் ஏற்றுக்கொள்வார்களாம். இந்த லட்சணத்தில் தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் விதத்தில் தி.மு.க.வையே கட்சி மேடைகளில் திட்டித்தீர்க்கும் காட்சிகளும் அரங்கேறுகின்றன. அற்புதமான இந்த சினிமாப் படம் இரண்டு, மூன்று மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கடவுளோடும், மக்களோடும் மட்டுமே கூட்டணி வைப்பேன் என்றவர்கள் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி வைக்கிறார்கள். இப்படி அ.தி.மு.க., தி.மு.க.வோடு மாறி மாறி கூட்டணி வைத்து தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்ட தமிழக அரசியல் கட்சிகளின் நீண்ட பட்டியலில் இன்னுமொரு கட்சியாக தே.மு.தி.க. சேருகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஒவ்வொன்றாக ஒழிந்தால்தான் 2021-ஆம் ஆண்டாவது தமிழர்களுக்கு ஓர் அரசியல் விடிவு பிறக்கும்.

சுப. உதயகுமாரன்

ஒருங்கிணைப்பாளர்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

 

Read previous post:
0a9
தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வருவது எப்போது?: குஷ்பு பதில்!

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.

Close