“கார்ப்பரேட்டுகளுக்காக பேசும் தலைவர்களை ஆதரிக்காதீர்கள்”: ஆஸ்கர் நாயகன் ஏற்புரை!

ஹாலிவுட்டின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த நடிகருக்கான பிரிவில் முதல்முறையாக விருதைத் தட்டிச் சென்றிருக்கிறார் லியானர்டோ டிகாப்ரியோ. உலகப்புகழ் பெற்ற ‘டைட்டானிக்’ படத்தின் நாயகனாக உலகெங்கும் அறிமுகமான இவருக்கு ‘தி ரெவனன்ட்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பெற்றுக்கொண்ட லியானர்டோ டிகாப்ரியோ தனது ஏற்புரையில் கூறியதாவது:

இயற்கை உலகுடனான மனிதர்களின் உறவே ‘ரெவனன்ட்’ திரைப்படம். அதிக வெப்பமயமான ஆண்டாக 2015-ல் பதிவான இந்த உலகத்தில், ‘ரெவனன்ட்’ படப்பிடிப்புக்காக, பனியைத் தேடி, உலகின் தெற்கு மூலைக்கு சென்றோம். காலநிலை மாற்றம் என்பது நிஜம். அது இப்போது நடந்து கொண்டிக்கிறது. மனித இனமே தற்போது எதிர்கொண்டிருக்கும் உடனடி அச்சுறுத்தல் அது. எந்த நடவடிக்கையையும் தள்ளிப் போடாமல் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதற்காக உழைக்க வேண்டும்.

உலகில் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களுக்காகவும், கார்ப்பரேட்களுக்காகவும் பேசும் தலைவர்களை ஆதரிக்காமல் மனித இனத்துக்காக, உலகின் பூர்வகுடிகளுக்காக (indigenous people), காலநிலை மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்படும் கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக்காக, நமது குழந்தைகளின் குழந்தைகளுக்காக, அரசியலாலும் பேராசையாலும் நசுக்கப்படும் குரல்களுக்காக பேசும் தலைவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

இந்த அற்புதமான விருதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. நாம் நமக்குக் கிடைத்த இந்த உலகை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; நான் இன்றைய (விருது பெற்ற) இரவை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவில்லை. மிக்க நன்றி.

இவ்வாறு லியானர்டோ டி காப்ரியோ பேசினார்.