ஜெயலலிதா சொத்துக்களை அரசுடைமை ஆக்க நடிகர் பார்த்திபன் ஆதரவு!

ஜெயலலிதாவின் ரூ.113 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என்ன ஆகும்? இனி அவை யாருக்குப் போய் சேரும்? என்ற விவாதம் மக்களிடம் நடந்து வருகிறது. அதில் குறிப்பாக ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு யாருக்கு கிடைக்கும் என்ற  எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் மிகுதியாக உள்ளது.

ஜெயலலிதா  தனது தாயார் வேதவல்லி (எ) சந்தியாவுடன் சேர்ந்து 1967ஆம் ஆண்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள 81ஆம் எண் வீட்டை வாங்கினார். அதற்கு அவர் ரூ.1.37 லட்சம் கொடுத்தார். 24 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்த பங்களா வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.90 கோடி ஆகும்.

தனது தாயாரின் நினைவாக ‘வேதா இல்லம்’ என பெயரிடப்பட்ட அந்த வீட்டில் ஜெயலலிதா சுமார் 50 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக சசிகலாவும் அந்த வீட்டில் ஜெயலலிதாவுடன் வசித்துள்ளார். தற்போது ஜெயலலிதா  மறைவுக்கு பிறகு சசிகலா அந்த வீட்டில் தொடர்ந்து வசித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்றும், அவருடைய சொத்துக்களை அரசுடைமை ஆக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், “ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவாலயம் ஆக்கப்பட வேண்டும். ஜெயலலிதா நிறைய புத்தகங்கள் சேகரித்து வைத்துள்ளார். சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் நிறைய விருதுகள் வாங்கியுள்ளார். ஜெயலலிதா பெற்ற அந்த விருதுகளும், புத்தகங்களும் நினைவாலயத்தில்  பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு அபரிதமான ஆதரவும் வரவேற்பும் இருந்தது. எனவே ஜெயலலிதா இல்லத்தை நினைவாலயமாக மாற்றியதும், அதை பெண்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும்.ஜெயலலிதாவின் அனைத்து  சொத்துக்களும் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். அதற்குமுன் ஜெயலலிதா பெயரில் என்னென்ன சொத்துக்கள் உள்ளன என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும். அதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்” என்றார்.

ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

“பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், தாங்கள் என்ன சம்பாதித்தார்களோ, அதை இந்த சமுதாயத்துக்கே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரை சொல்லலாம்” என்றார்.