பட்டிமன்ற வேலையை மட்டும் பாருங்கள் பாண்டே!

ரங்கராஜ் பாண்டே என்ற அ.திமுக. துதிபாடியும், அருண் கிருஷ்ணமூர்த்தி என்ற மரத்தடி ஜோதிடரும் சேர்ந்து, தந்தி தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை “கருத்துக்கணிப்பு” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள்.

அதில், “அமெரிக்க அதிபர் தேர்தலிலும் அதிமுகவே அமோக வெற்றி பெறும்” எனும் அளவுக்கு இவர்கள் ஜெயலலிதாவுக்கு கூச்சமில்லாமல் ஜால்ரா அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

நேற்று (28-04-2016) இரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியை எடுத்து வைத்துக்கொண்டு, இருவரும் அலசோ அலசு என்று அலசினார்கள். அப்போது அருண் கிருஷ்ணமூர்த்தி, “பெரியகுளம் தொகுதியில் ஆளும் கட்சிக்கும், அதிமுகவைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அதிருப்தி அதிகரித்துள்ளது. அதனால்தான் முன்பு இந்த தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் இப்போது தொகுதி மாறி போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார்” என்கிற ரீதியில் வெடிகுண்டு வீசினார்..

நாம் அதிர்ச்சி அடைந்தோம் – பெரியகுளம் தொகுதியில் ஆளுங்கட்சிக்கு அதிருப்தி அதிகரித்திருக்கிறது என்பதற்காக அல்ல! பெரியகுளம் பொதுத் தொகுதியாக இருந்தபோது அதில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். தொகுதி மறுசீரமைப்பில் இந்த தொகுதி தாழ்த்தப்பட்டோர் மட்டுமே போட்டியிடக்கூடிய தனி தொகுதியாக மாற்றப்பட்டு விட்டதால், தாழ்த்தப்பட்டோர் அல்லாத ஓ.பன்னீர்செல்வம் அங்கு போட்டியிட முடியாது. அதனால் அவர் தொகுதி மாறி பொது தொகுதியான போடிநாயக்கனூரில் போட்டியிடுகிறார்…

இதுகூட தெரியாமல் இந்த அருண் கிருஷ்ணமூர்த்தி “கள ஆய்வில்” என்ன கழற்றியிருப்பார் என்ற கேள்வி சட்டென நமக்கு ஏற்பட்டது. அருண் கிருஷ்ணமூர்த்தியின் இந்த தவறை, நெறியாளர் ரங்கராஜ் பாண்டே குறுக்கே விழுந்து உடனே சரி செய்வார் என்று எதிர்பார்த்தோம். பாண்டே அதை செய்யவில்லை. அவருக்கும் இது தெரியாதோ, என்னவோ?

இப்படித்தான் வெட்கங்கெட்டதனமாய் போய்க்கொண்டிருக்கிறது பாண்டே – அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் ‘கருத்துக்கணிப்பு” கச்சேரி என்ற ஆயாசத்துடன் நாம் முகநூலில் மேய்கையில், நம் கண்ணில் பட்டது சமூக ஆர்வலர் எவிடன்ஸ் கதிர் எழுதிய பதிவு. அது:-

“கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் அ.தி.மு.க.விற்கு தந்தி தொலைக்காட்சி தேர்தல் பிரச்சாரம் செய்கிறது.

தி.மு.க.மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் வேட்பாளர்களில் யார் வருவார்கள்? அ.தி.மு.க.வரும் என்று 43 சதவீதத்தினர் சொன்னார்கள் என்றால், தி.மு.க.வரும் என்று 42 சதவீதத்தினர் சொன்னார்களாம். ஒருவேளை தி.மு.க.வெற்றி பெற்றால், ஒரு சதவீதம் மட்டும்தான் வித்தியாசம் என்று சொன்னோம் அல்லவா? இறுதி கட்ட தேர்தல் நேரத்தில் இப்படி மாறுவது இயல்பு என்று நியாயம் கற்பிக்க முடியும்.

எந்த கட்சி முதலில் இருக்கிறது, அதற்கான காரணங்கள் என்ன என்று பாண்டே கேள்வி கேட்க, ஒருவர் பதில் சொன்னார். முந்தைய தேர்தல் முடிவுகளையும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளையும் கொண்டு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்.

கள நிலவரம், ஆட்சி மீதான மக்களின் விமர்சனம் என்ன என்பதை துளிகூட ஆராயவில்லை. தொகுதியின் முடிவுகளை மாற்றக்கூடிய தொகுதி சார்ந்த பிரச்னை குறித்து எந்த ஆய்வும் இல்லை.

வருத்தமாக இருக்கிறது. களத்திற்கு செல்லாமல் எல்.சி.டி.யில் ப்ராஜெக்ட் presentation செய்யும் கலர் அடிக்கும் வேலையை செய்வதுதான் கருத்து கணிப்பா?

பிரிண்ட் ஊடகங்கள் செய்யும் களப் பணியை எடுத்துக்கொண்டு, கொஞ்சம் வாய் சாமர்த்தியத்துடன் பேசினால் “நெறியாளர்” என்று பெயர் வாங்கலாமே தவிர, வேறு ஒரு பயனும் இல்லை.

பட்டிமன்ற வேலையை மட்டும் பாருங்கள் பாண்டே. தரவுகளை சேகரிக்கும் திறன் உங்களுக்கும் இல்லை. உங்கள் தொலைகாட்சிக்கும் இல்லை.

மக்களை முட்டாள் ஆக்காதீர்கள்.”

 – அமரகீதன்