நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்கள் எதிர்ப்பை மீறி மத்திய அரசு கையெழுத்து!
தமிழகத்தில் நெடுவாசல் உட்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது.
டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஹோட்டலில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அனுமதி அளித்தது. இதற்கு நெடுவாசல் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் விருப்பத்துக்கு எதிராக திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதி அளித்ததை அடுத்து, மார்ச் 9 ஆம் தேதி நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அதுபோல்
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்ததால் மார்ச் 24 ஆம் தேதி நல்லாண்டார் கொல்லையிலும், 25ஆம் தேதி வடகாட்டிலும் மக்கள் தங்களது தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நெடுவாசல் உட்பட நாட்டில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு விடப்பட்ட ஏலத்துக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது.
தமிழ்நாட்டில் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடக பாஜக.காரருக்கு சொந்தமான ஜெம் லெபாரட்டரீஸ் என்ற நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தங்கள் எதிர்ப்பை மீறி ஒப்பந்தம் கையெழுத்தானதால் நெடுவாசல் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.