‘ஜோக்கர்’ படத்துக்கு சிறந்த படைப்புக்கான விருது!

ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி, வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம், விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுவரும் நிலையில், ‘எவிடன்ஸ்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பு விருதும், ரொக்க பரிசும் இப்படத்திற்கு வழங்கப்பட இருக்கிறது.

இது குறித்து ‘எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் அதிகாரி கதிர் கூறியிருப்பதாவது:

ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும், அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய ஆதிக்க அரசியலையும் வெளுத்து வாங்கி இருக்கிறார் ‘ஜோக்கர்’.

ஒரு பாடல், போராட்டத்தின் வடிவங்களின் தொகுப்பாக இருக்கிறது. ஒரு பாடல், கழிவறை கட்டுவதற்கு நடத்தப்படும் அவலத்தின் சோகத்தை பிரதிபலிக்கிறது. ஒரு பாடல், நீதியின் போராட்டத்தை விசாலமாக்குகிறது. ஒரு பாடல், எளிய காதலை சொல்லுகிறது.

நெருப்பு வசனங்கள். “பிரதமரின் ஆட்கள் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்”; “நீங்கள் அடித்து பிழைக்க எங்களுக்குகாக ஏன் திட்டம் போடுறீங்க?” என்கிற வசனம் ஷார்ப். மதவாத கட்சியின் கொடியோடு நடிகர்களின் பேனர்களை காட்டி, “உங்கள் எல்லோரையும் விட மாட்டேன்” என்று பேசுகிற ஜோக்கரின் வசனம் துணிச்சலின் உச்சம் என்பேன்.

அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக உயிரையும் தியாகம் செய்கிறான் ஜோக்கர். மது, சாதி, மதவாதம், ஊழல் என்று அடித்தட்டு மக்கள் சந்திக்கும் எல்லா கொடுமைகளையும் கழிவறையின் அரசியலிருந்து அழகாக சொல்லி இருக்கிறார் ராஜு முருகன்.

“யாருக்காக நாம் போராடுகிறோமோ அவர்களே நம்மை புரிந்து கொள்ளவில்லை” என்கிற வசனம் உண்மையானது. வலி மிகுந்தது. வீதியில் நின்றுகொண்டு அநீதிக்கு எதிராக போராடும் எல்லா போராளிகளையும் கவுரவப்படுத்தி இருக்கிறார் ராஜு முருகன்.

அம்பேத்கர், பெரியார், ரோஹித் வெமுலா, செங்கொடி போராட்டம், பறை இசை என்று நீதிக்கான எல்லா அடையாளமும் ஜோக்கரை வலிமையாக்கி உள்ளது.

சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த படம் ஜோக்கர்.

சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பு விருதும் ரொக்க பரிசும் இந்த ஆண்டு ஜோக்கர் படத்திற்கு வழங்கப்பட இருக்கிறது.

வாழ்த்துக்கள் ராஜு முருகன்.

இவ்வாறு ‘எவிடன்ஸ்’ கதிர் கூறியுள்ளார்.