‘ஜோக்கர்’ இயக்குனர் ராஜூ முருகனுக்கு செப்.17ல் விருது, ரொக்கப்பரிசு!

ராஜூ முருகன் இயக்கியுள்ள ‘ஜோக்கர்’ திரைப்படத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு குவிந்து வருகிறது. திரைப்பட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மட்டுமின்றி நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட சகல தரப்பினரும் இப்படத்தை வரவேற்று, பாராட்டி வருகிறார்கள்.

‘சமுக மாற்றத்துக்கான சிறந்த படைப்பு’ விருது ‘ஜோக்கர்’ படத்துக்கு வழங்க இருப்பதாக, மதுரையிலிருந்து செயல்படும் ‘எவிடன்ஸ்’ தன்னார்வ தொண்டு அமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த விருது அடுத்த (செப்டம்பர்) மாதம் 17ஆம் தேதி அளிக்கப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ‘எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் அதிகாரி கதிர் கூறுகையில், “ஜோக்கர்’ திரைப்படத்தை இயக்கிய ராஜு முருகன் அவர்களுக்கு ‘சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பு’ விருதினை எவிடென்ஸ் அமைப்பு வழங்க இருக்கிறது. இந்த நிகழ்வு வருகின்ற 17 செப்டம்பர் 2016 அன்று மதுரையில் நடைபெற இருக்கிறது. விருதுடன் ரொக்க பரிசு 25,000/ வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.