சிந்துபாத் – விமர்சனம்

ஊரில் சிறுவன் சூர்யாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார் விஜய் சேதுபதி. சொந்த வீட்டில் இருக்கும் இவரை திருட்டு தொழிலை விட்டுவிட்டு நன்றாக வாழ அவரது நண்பர் ஜார்ஜ் அறிவுரை கூறுகிறார். ஆனாலும் அதை ஏற்க மறுத்து திருட்டு தொழிலையே செய்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு சரியாக காது கேட்காது.

தனது மாமா அருள்தாஸின் வற்புறுத்தலின் பேரில் மலேசியாவில் வேலை பார்த்து அஞ்சலி விடுமுறைக்கு ஊருக்கு வருகிறார். மிகவும் சத்தமாக பேசக்கூடிய இவரை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் காதலை மறுக்கும் அஞ்சலி பின்னர், அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார். இந்த காதலை பிடிக்காத மாமா அருள்தாஸ், அஞ்சலியை கண்டிக்கிறார். இதனால் கோபமடையும் விஜய்சேதுபதி அருள்தாஸை வெளுத்து வாங்குகிறார்

இந்த கோபத்தின் வெளிப்பாடாக மீண்டும் மலேசியா செல்லும் அஞ்சலியை அங்கிருக்கும் லிங்கா கும்பலிடம் பணத்திற்கு விற்று விடுகிறார். இதையறியும் விஜய்சேதுபதி மலேசியாவிற்கு சென்று அஞ்சலியை மீட்க நினைக்கிறார்.

இறுதியில் லிங்கா கும்பலிடம் சிக்கி இருக்கும் அஞ்சலியை விஜய்சேதுபதி மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகர்களுக்கே உரிய கமர்சியல் கதையில் விஜய் சேதுபதி, சூர்யா விஜய் சேதுபதி, அஞ்சலி என சரியான நடிகர்களை நுழைத்து நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்து இருக்கிறார் அருண்.

விஜய் சேதுபதி குறும்பு, காதல், காமெடி, பஞ்ச் வசனம், அதிரடி சண்டைக்காட்சிகள் என பக்காவான கமர்சியல் படத்துக்கும் நன்றாக பொருந்துகிறார். அஞ்சலியிடம் காதல் பார்வை, எதிர்பாராத விதமாக தாலி கட்டுதல், சூர்யாவுடனான எமோ‌ஷனல், இவனை அடிச்சா தப்பில்லையா? சொல்லுங்க சார் என்று கேட்டு காத்திருந்து பதில் வந்ததும் அடிப்பது என படம் முழுக்க விஜய் சேதுபதி ராஜ்ஜியம் தான்.

விஜய் சேதுபதி எட்டடி பாய்ந்தால் அவர் மகன் சூர்யாவோ எண்பது அடி பாய்கிறார். காமெடி, எமோ‌ஷனல், பயம், சண்டை என அவரும் கலக்கி இருக்கிறார். ஜார்ஜிடம் அவர் கதை சொல்ல தொடங்கும்போது ரசிகர்கள் கைதட்ட தொடங்குகின்றனர்.

கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடித்தெரு வரிசையில் அஞ்சலிக்கு நடிக்க முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். மாமனை அடிக்கும் விஜய் சேதுபதியிடம் பத்தாது இன்னும் அடி என சொல்லும் காட்சி, முத்தக் காட்சி, மலேசியாவில் கடத்தல் கும்பலிடம் சிக்கி சித்தரவதை செய்யும் காட்சி, கல்யாணம் பண்ணி ஒருநாள் கூட வாழலைன்னா என்று கெஞ்சும் காட்சி என தன் திறமையை காட்டி இருக்கிறார். விஜய் சேதுபதி அஞ்சலி ஜோடி பொருத்தமாக இருக்கிறது.

மிரட்டும் வில்லனாக லிங்கா. ஈவு இரக்கமே இல்லாமல் கொல்லும் காட்சிகளில் பதற வைக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி முன்பு மட்டும் அடங்கி போவது செயற்கையாக இருக்கிறது. இவரது கெட்-அப் மிரள வைக்கிறது.

படத்தின் பெரிய பலம் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு. தென்காசியாக இருந்தாலும் சரி, மலேசியாவாக இருந்தாலும் சரி விஜய்யின் கேமரா அழகாக படம் பிடித்துள்ளது. கோணங்களாலும் வண்ணங்களாலும் நம்மை அசர வைத்துள்ளார். யுவனின் இசையில் படம் கமர்சியலாக மாறி இருக்கிறது. ரூபன் படத்தொகுப்பில் இன்னும் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

முதல் பாதியில் காதல், காமெடி, ஆக்‌‌ஷன் என்று நகரும் கதை அஞ்சலி சிக்கியதும் வேகம் குறைந்து போகிறது. கமர்சியல் படத்திலும் தோல் வியாபாரம் என்ற இதுவரை யாரும் தொடாத ஒரு வி‌ஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். சில தேவையில்லாத காட்சிகளால் படத்தின் நீளம் மட்டும் சற்று அதிகமாக தெரிகிறது. மற்றபடி குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாகவும் நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் அமைந்து இருக்கிறது.

மொத்தத்தில் ‘சிந்துபாத்’ சுவாரஸ்யம் குறைவு.