விவாதங்களை உருவாக்கியதாலேயே ‘தரமணி’ முக்கியமான படமாக மாறியிருக்கிறது!

தரமணி!

படத்தில் வரும் இரண்டு காட்சிகள் மட்டும்தான் கதை. நாயகனுக்கும் நாயகிக்கும் நடக்கும் சண்டை ஒன்று. படத்தின் பிற்பகுதியில் தம்பதிக்குள் வரும் சண்டை இரண்டு.

இந்த சண்டை காட்சிகளுக்கு அடைய மற்ற காட்சிகளை முடைந்து செல்ல முனைந்திருக்கிறார் ராம். பாத்திர படைப்பை நியாயப்படுத்த இன்னும் அதிக முனைப்பு. பொதுப்புத்தியின் morality, immorality கற்பிதங்களை மீற தயங்கி இருக்கிறார். வணிக சட்டகத்துக்குள் நாமும் படம் இயக்கினால் இப்படித்தான் சிரமப்படுவோம் போலும்.

எனக்கு இருக்கும் கேள்வி ஒன்றுதான். ஆண்ட்ரியா ஏன் வேறு ஆணை நாடாத பெண்ணாக காட்டப்பட வேண்டும்? Director’s liberty என்று சொல்லலாம். உண்மைதான். அதில் நாம் தலையிட முடியாதுதான். இருந்தும் இந்த கேள்வி எழாமல் இல்லை.

இருவரும் பிரிந்த பிறகு, இன்னொரு ஆணின் பரிச்சயத்தை ஆண்ட்ரியா நாடி, அந்த நேரத்தில் மனம் திருந்தி வரும் நாயகன் என்னும்போது முதிர்ச்சியான பல விஷயங்களை விவாதிக்க கூடிய களம் கிடைத்திருக்கும். அப்படித்தான் வசந்த் இயக்கிய ‘ரிதம்’ முக்கியமான படம் ஆகிறது.

ஆண்ட்ரியா இன்னொரு ஆணை காதலித்து மீண்டும் நாயகனுடன் இணையும் சூழல் காண்பித்திருந்தால், பொதுப்புத்தி படத்தை ஏற்க தயங்கி இருக்கும் என ராம் நினைத்திருக்கலாம். ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை என்பதுதான் உண்மை.

படத்தின் இறுதிப்பகுதியில் அனைவராலும் ஊகிக்கக்கூடிய அதே அரதப்பழசான முடிவை கொடுத்ததில் ராம் தன் பயத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

உண்மையில் தரமணியின் ஆணுக்கும் பெண்ணுக்குமான பிரச்சினை என்ன?

ஐடி துறை வேலைகள், பெண்ணுக்கு பெரும் வாய்ப்புகள் வழங்குகின்றன. காரணம், பெண்கள்தான் மலிவான மனித சக்தி. ஆண்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது.

வீட்டு ஆண்களிடம் இருந்து விலகுவதைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் பெண் விடுதலை என்ன சொல்லி கொடுக்கின்றன. ஏனெனில் அப்படி நம்புகையில்தான் நிறுவனங்களுக்கான உழைப்புச்சக்தி கிடைக்கும்.

ஐடி உலகம் கொடுக்கும் படாடோப வாழ்க்கை வீட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டிருந்த பெண்களை மயக்குகிறது. எண்ணற்ற சாத்தியங்களை கொடுக்கிறது. கட்டற்ற செலவு, கட்டற்ற வாழ்க்கை முறை, கட்டற்ற தனி வாழ்க்கைகள் என. வீட்டு ஆண்கள் மீதான மிதமிஞ்சிய வெறுப்பு தொடர்ந்து அங்கே ஊட்டப்படுகிறது.

ஐடி நிறுவனங்களும் மேற்கு சிந்தனையும் சொல்லும் பெண் விடுதலை எத்தனை hypocritic என்பதை, வீட்டு ஆண் செய்யும் ஒடுக்குமுறைகளை விட அதிகமான ஒடுக்குமுறைகளை நிறுவனங்கள் செய்யும் உண்மையில் உணர்ந்து கொள்ளலாம். நிறுவனங்களில் இருக்கும் மேலதிகார ஆண்கள் மட்டும் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா என்ன? அவர்களும் இதே ஆணாதிக்க கட்டுமானங்களில் இருந்து போகிறவர்கள்தானே. ஆனால் அவர்கள் சொல்பவற்றை வேறு வழியில்லாமல் பெண்கள் ஏற்பதும் சகிப்பதும் job ethics என கற்றுக்கொடுக்கப்படும்.

16 மணி நேர வேலை, பாலியல் அச்சுறுத்தல், சுரண்டல், உரிமை மீறல் என ஏகப்பட்ட பிரச்சினைகளை பெண் சந்திப்பது வீட்டில் அல்ல. பன்னாட்டு நிறுவனங்களில்தான்.

வீட்டு ஒடுக்குமுறைக்கு மாற்றாக பெண்கள் அலுவலக ஒடுக்குமுறையை தேர்ந்தெடுக்க வைப்பது அதன் கவர்ச்சி உலகம்தான். ஜெயகாந்தன் எழுதிய ‘அக்கினிப்பிரவேசம்’ சிறுகதையில் வரும் கார் போல் அவ்வுலகம் ஜொலிக்கிறது. பெண்களுக்கு சிறகை கொடுப்பது போல் பாவ்லா காட்டுகிறது. ஆனால் அந்த சிறகு ஆணிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறகு.

தன் சிறகை பறிகொடுத்த ஆண், அச்சிறகை பயன்படுத்தும் பெண்ணை பார்த்து பொறாமைப்படுகிறான். தாழ்வு நிலை கொள்கிறான். அவன் சிறகை பறித்ததோடு மட்டுமல்லாமல், அவன் உறவை நிராகரிக்கும் போக்கையும் பெண்ணுக்கு ஊட்டி விடப்படுவது இன்னுமே அவனுக்கு பதற்றத்தையும் கோபத்தையும் கொடுக்கிறது.

இப்படி சிறகு இழந்தவனும் அச்சிறகை அடைந்தவளும் ஒரே கூரையின் கீழ் வாழும் நிலை ஏற்பட்டால், அது எத்தனை கதைகளை கொண்ட களமாக இருக்கும்?

எவரும் தம் சிறகுகளை இழக்க வேண்டாம் என்பதுதான் நம் விருப்பம். போன தலைமுறை வரை சிறகு இழந்திருந்த பெண்கள் பரிதாபத்துக்குரியவர்கள் எனில், இந்த தலைமுறையில் சிறகு பறிகொடுத்த ஆண்களும் சிறகு இருப்பதாக நினைத்துக்கொண்டு ஆணை நிராகரிக்கும் பெண்களும் நிகர் அளவில் பரிதாபத்துக்குரியவர்கள். இந்த இருபாலினத்தையும் சண்டை போட வைத்துவிட்டு, சிறகு கட்டி உயரே உண்மையில் போய்க்கொண்டிருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் லாபங்கள்தான்.

ஏதோ வறட்டுத்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம். புதிதாய் திருமணமான பெண்கள் நேர்காணலுக்கு செல்லும்போது கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமான கேள்வி, எப்போது குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்றுதான். திருமணமாகாத பெண்கள் எனில், திருமணம் எப்போது என்ற கேள்வி இடம்பெறும். ஏனெனில் விடுமுறை, வேலை விடுவது போன்ற விஷயங்களை யோசிப்பதற்காக இக்கேள்விகள் கேட்கப்படுகின்றன. இருக்கலாம். நியாயம்தான். ஆனால் இந்த கேள்விகள் பெண் மனதில் ஏற்படுத்தும் உளவியல் சிந்தனைகள் என்னவாக இருக்கும்?

திருமணம், குழந்தை பெறுதல் ஆகியவை தள்ளி போடப்படும். யோசித்து பாருங்கள். இந்த இரு விஷயங்களை பற்றியும் பெற்றோரோ, கணவனோ கேட்டால் இந்த காலத்தில் பெண்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள்? ஆண், பெண் உறவு சிக்கலாக்கப்படும் வழிகளில் இது ஒருவகைதான்.

இந்த தலைமுறையில் இருக்கும் ஆண், பெண் உறவு சிக்கல்கள், தனிமை, நியோலிபரலிச சிக்கல்கள் என பலவற்றுக்கு காரணம் உண்மையிலே வேறு. நாம் ஆண்களை மட்டும் திட்டி கொண்டிருக்கிறோம். உண்மையில் அவர்களும் இங்கு பாதிக்கப்பட்டவர்களே. இருபாலினத்துக்கும் தேவை தம் எதிர்பார்ப்புகள், சூழல்கள், சிக்கல்கள் ஆகியவற்றை பற்றிய வெளிப்படையான உரையாடல் மட்டுமே.

இருக்கும் ஒரு ஜோடி சிறகுகளில் ஒன்றை ஆணும் மற்றொன்றை பெண்ணும் எடுத்துக்கொண்டு ஒருவருடன் ஒருவர் கைகோர்த்து உயர பறந்து பன்னாட்டு லாபவெறி என்னும் வலையிலிருந்து தப்பிக்கலாம். அதை நோக்கிய உரையாடலாக தரமணி இருந்திருந்தால் இன்னுமே முக்கியமான படமாக இருந்திருக்கும். இது என் எதிர்பார்ப்பு மட்டும்தான். ஆனாலும் இப்படியான விவாதங்களை உருவாக்கியதாலேயே தரமணி முக்கியமான படமாக மாறியிருப்பதையும் மறுக்க முடியாது.

ஆகவே தரமணியை பார்க்கலாம்.

RAJASANGEETHAN JOHN