அஷ்டமி என்பதால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் சமரச பேச்சு இன்று நடக்கவில்லை!!

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார். அதில் தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். அதை எடப்பாடி பழனிசாமி அணி அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டு தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

இதை தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அடுத்த கட்டமாக கட்சி மற்றும் ஆட்சிப் பதவிகளை இரு அணியினரும் பகிர்ந்து கொள்வது தொடர்பாக புதிய சமரச திட்டம் தயாராகி வருகிறது. அதன்படி, தனிப்பட்ட யாரும் இனி அ.தி.மு.க.வில் முடிவு எடுக்க முடியாது. கூட்டுப் பொறுப்புடன் கூடிய குழுதான் முடிவு எடுக்கும். இதற்காக மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.

ஆட்சியைப்  பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் என்றும், எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் என்றும் ஒரு சமரச திட்டம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

முதல்வராகவும் கட்சியின் பொதுச் செயலராகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு எப்போதெல்லாம் சிக்கல் ஏற்பட்டு பதவி விலக நேர்ந்ததோ, அப்போதெல்லாம், முதல்வர் பதவியில் பன்னீர்செல்வத்தைத்தான் நியமித்தார். அப்படித்தான், மூன்று முறை முதல்வராக பதவி வகித்தார் பன்னீர்செல்வம். அதனால், இம்முறையும் அவருக்கே முதல்வர் பதவியை அளிக்க வேண்டும் என்கிறது இந்த சமரசத் திட்டம்.

ஓரிருவரைத் தவிர, அமைச்சரவையில் இப்போதைக்கு எந்த மாற்றமும் கொண்டு வரத் தேவையில்லை. பாண்டியராஜன், அவசியம் அமைச்சர் ஆக்கப்பட வேண்டும். மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்குப் பின், தகுதியின் அடிப்படையில் அமைச்சரவையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

மேலும், ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை விலக்க, உடனடியாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். விசாரணையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதற்கொண்டு, சம்பந்தப்பட்ட எல்லோரையும் விசாரிக்க வேண்டும். விசாரணையில், சசிகலா குடும்பத்தினர்தான் குற்றவாளி என கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை விரைவில் அரசுடைமையாக்கி, அதை அரசு சார்பிலான நினைவு இல்லமாக்க வேண்டும். அதை மக்கள் பார்வைக்கு விட வேண்டும். ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள், படித்த புத்தகங்கள், அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்களெல்லாம், நினைவு இல்லத்தில் வைக்கப்பட வேண்டும்.

இந்த சமரச திட்டத்தின்படி இன்று பேச்சுவார்த்தை தொடங்க இரு அணியினரும் நினைத்தனர். ஆனால், இன்று அஷ்டமி என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டது. நாளை அதிகாரப்பூர்வமாக இரு அணியினரும் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். அதன்பிறகு சமரச திட்டத்தின் முடிவுகள் என்ன, அதில் செய்யப்படும் மாற்றங்கள் என்ன என்பது தெரியவரும்.

 

Read previous post:
0
தினகரன் ஒதுக்கி வைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் சசிகலா குடும்பத்தினர் முகநூலில் சண்டை!

அதிமுக (அம்மா) அணியில் அமைச்சர்கள் அனைவரும், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும்

Close