54321 – விமர்சனம்
கதையின் பெரும்பகுதி ஒரே வீட்டுக்குள் நடப்பது போன்ற, ‘மூடர்கூடம்’ பாணியிலான, ஆனால் உள்ளம் பதைபதைக்கச் செய்கிற க்ரைம் த்ரில்லர் இந்த ‘54321’.
ஓர் இரவு. ஒரு பங்களா மாதிரியான வீடு. நாயகி பவித்ரா கவுடா மட்டும் அந்த வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறார். வேலைக்குச் சென்றிருந்த அவரது காதல் கணவன் – நாயகன் அர்வின், தாமதமாக காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
அர்வின் வீடு வந்து சேருவதற்குள், அந்த வீட்டுக்குள் திருடன் ஒருவன் நுழைகிறான். இரும்புப் பெட்டியைத் திறந்து நகைகளையும், பணத்தையும் அள்ளி ஒரு பைக்குள் போட்டுக்கொண்டு கிளம்புகிறான். அப்போது வில்லன் சபீர் அதே வீட்டுக்குள் நுழைய, அவரை பார்த்து அஞ்சும் திருடன் அந்த வீட்டுக்குள்ளேயே பதுங்கிக் கொள்கிறான்.
வீட்டுக்குள் வந்த வில்லன் சபீர், அர்வினின் மனைவியை அடித்து கட்டிப் போடுகிறார். அப்போது வீட்டுக்கு வந்து சேரும் அர்வினையும் அடித்து, உதைத்து கட்டிப்போடுகிறார். அதன்பிறகு, சபீர், அந்த வீட்டின் அறைக்குள் இருந்து ஒரு பெண் குழந்தையை கூட்டிவந்து, தான் தெருவில் அந்த குழந்தையை பார்த்ததாகவும், அவளை தனக்கு பிடிக்காததால் அழைத்து வந்ததாகவும் கூறி, அந்த குழந்தையையும் இவர்களுடன் சேர்த்து கட்டிப் போட்டு வைக்கிறார்.
அப்போது, சபீர், அர்வினிடம் ஒரு நிபந்தனை வைக்கிறார். அதாவது, தான் வெளியில் இருந்து கூட்டி வந்ததாக கூறும் அந்த பெண் குழந்தையை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அர்வின் கொலை செய்ய வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. அப்படி அந்த குழந்தையை அர்வின் கொலை செய்யாவிட்டால், அவரது மனைவியை கொன்றுவிடப் போவதாக மிரட்டுகிறார்.
சபீர், அர்வீனை கொலை செய்யச் சொல்லும் அந்த பெண் குழந்தை யார்? அவளை எதற்காக அர்வினை கொலை செய்யச் சொல்கிறார்? அர்வினுக்கும், சபீருக்கும் என்ன சம்பந்தம்? என்பதை பிற்பாதியில் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
கதாநாயகன் அர்வினுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. படம் முழுக்க சபீரிடம் கெஞ்சுவது போலவே இவருடைய காட்சிகள் அமைந்துள்ளன. இருப்பினும் தனது கதாபாத்திரத்தை முடிந்த அளவு சிறப்பாக செய்திருக்கிறார். சபீர், வில்லத்தனமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.
நாயகி பவித்ரா கவுடாவுக்கும் படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. நாயகனை காதலிப்பதற்கு மட்டும் சில காட்சிகள் பயன்பட்டிருக்கிறார். பின்னர் அவரை கட்டிப்போட்டுவிட்டு, வாயில் துணியை திணித்துவிடுகிறார்கள். அதன்பிறகு, அவரது கதாபாத்திரம் மௌனமாகவே இருந்துவிட நேர்கிறது.
திருடனாக வரும் ஜெயக்குமார் ஜானகிராமன், வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களால் பயந்து நடுங்குவதும், தான் மாட்டிக்கொள்வோமோ என்று பயந்து தப்பியோட முயல்வதுமாக சிறப்பாக நடித்து சிரிக்க வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு ஒரு வித்தியாசமான திரில்லர் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவேந்திரா பிரசாத். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவருக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் வைத்திருக்கிறார். ஆனாலும், திரைக்கதையின் சுவாரஸ்யத்தால் அந்த பிளாஷ்பேக் காட்சிகள் எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கிறது. நூறு பேரில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் OCD என்ற நோயை பற்றி இப்படத்தில் குறிப்பிட்டிருக்கும் இயக்குனர், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்காமல், அவர்களை குணப்படுத்துவதற்கான எளிய முறைகளையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்.
ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் படத்தில் பாடல்களே இல்லை. இருப்பினும், பின்னணி இசை திரில்லுடன் நகர்வது சிறப்பு. பானு முருகனின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.
சின்னஞ்சிறு சிறுவன் கொலை செய்யும் கொடூரக்காட்சிகள் இருப்பதால், இப்படத்துக்கு தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருப்பது நியாயமே.
‘54321’ – 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசிக்கலாம்!