சென்னை அயனாவரத்தில் ரஜினியின் ‘2.0’ படப்பிடிப்பு!
ரஜினிகாந்த் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘2.0’. இது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
சில மாதங்களுக்குமுன் டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகள் நடப்பது போன்றும், அதில் வில்லன் அக்ஷய்குமார் ஆக்ரோஷமாக தோன்றுவது போன்றும் காட்சிகளை படமாக்கினார்கள். அவரது வில்லன் தோற்றம் இணையதளங்களிலும் வெளியானது.
பின்னர், ரஜினி ‘கபாலி’ பட வேலைகளில் ஈடுபட்டதால் ‘2.0’ படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனாலும் ரஜினி இல்லாமல் மற்ற நடிகர்-நடிகைகள் தோன்றும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வந்தன. 50 சதவீத படப்பிடிப்பை முடித்து விட்டதாக இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே கூறி இருந்தார்.
கபாலி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வந்த ரஜினி கடந்த வாரம் சென்னை திரும்பினார். இதனால் ‘2.0’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. படப்பிடிப்பை விரைந்து முடிக்க படக்குழுவினர் தீவிரமாகி உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை அயனாவரம் ஜாய்ன்ட் ஆபீஸ் ரெயில்வே அலுவலகத்தில் இன்று ‘2.0’ படப்பிடிப்பு நடைபெற்றது. ரெயில்வே அலுவலகத்தை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகமாக மாற்றி இருந்தனர்.
பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்றனர்.
படப்பிடிப்பு நடப்பதை தொடர்ந்து இன்று காலையிலேயே இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டார். தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதையொட்டி அயனாவரம் போர்ச்சீஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடப்பது பற்றி தெரிந்ததும் அப்பகுதி மக்கள் பெருந்திரளாக அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.