“நல்லகண்ணுவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள்” என்போர் கவனத்துக்கு!

“we are with you…” என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு, இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொருமுகிறார்கள்.

“நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள்” என்கிற அரைவேக்காட்டுததனமான பதிவுகள் வேற. இது என்ன மாதிரியான டிசைன் என்றே புரியவில்லை. . நல்லகண்ணு ஐயாவுக்கு இது முதல் போராட்டம், முதல் கைது என்பது போல புலம்புகிறார்கள். லெனின், மார்க்ஸ், நல்லகண்ணு ஐயா… எல்லோரின் போராட்டங்களும் சக மனிதர்களுக்கானது தானே. நான் இயங்கும் துறையில் இயங்கும் ஒரு சக மனிதனுக்கு தார்மீக அடிப்படையில் என்னுடைய குரலைப் பதிவு செய்கிறேன். அது என்னுடைய கடமையும்கூட.!

“நீங்கள் இன்னும் படம் பார்க்கவில்லையா?” என்றும் நண்பர்கள் கேட்கிறார்கள். படம் பேசுகிற அரசியலுக்கும், படத்திற்குப் பின்னால் நடக்கிற அரசியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சிவகார்த்திகேயன் இதற்குமுன் ஆகச் சிறந்த கிளாஸிக்குகளில் நடித்தது போலவும், இப்போது அதை விட்டுவிட்டு சமூகத்தைக் கேடாக்கும் சினிமாவில் நடித்துவிட்டது போலவும் துடிப்பதே பெரிய அரசியலாகத் தெரிகிறது எனக்கு.

அவரே மேடையில் மிகத் தெளிவாகப் பேசுகிறார். “என்றாவது ஒரு நாள் நிச்சயம் நல்ல சினிமாவை நோக்கி நகர்வோம்” என்று. நாம் ஆதர்சமாகக் கொண்டாடுகிற இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் யாருமே கோமாளிப் படங்கள் எடுக்கவில்லையா, நடிக்கவில்லையா? இல்லை, நாமும் பார்க்கவில்லையா?

மேடையில் அவர் அப்படிப் பேசுவதே அந்த படத்தைப் பற்றி அவர் நம்மைவிட தெளிவான பார்வையைக் கொண்டிருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தவறுகளைத் திருத்திக்கொள்கிறேன் என அவர் மேடையில் பேசியது போல, திருத்திக்கொள்வார் என்றும் நம்புவோம்.

அப்புறம் நண்பர்களே… “மோசமான சினிமா”, “மோசமான கலைஞன்” என்று நீங்கள் சொல்கிற அவர்களிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. அவர்கள் இயல்பாக இருக்கிறார்கள். பரஸ்பரம் அன்புடனும் நம்பிக்கையிடனும் நல்ல நட்புடனும் இருக்கிறார்கள். ஜிவி.பிராகஷ் குமாரும், ராஜேஷும், பேரரசுவும் விஜயும், சிவகார்த்திகேயனும், பொன்ராமும், ஆதிக் ரவிச்சதிரனும், சிம்புவும் எளிதில் இணைந்துவிடுகிறார்கள். நட்பாகி விடுகிறார்கள்.

சமூகத்தைப் பற்றியும், நல்ல சினிமாவைப் பற்றியும் பேசுகிறவர்கள் தான் உடைபட்டு துண்டு துண்டாகச் சிதறி நிற்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் வன்மத்தோடும் காழ்புணர்வோடும் இருக்கிறார்கள். தன் காலத்தில் பயணிக்கும் சக இயக்குனர்களின் பெயரைக்கூட தெரிந்து வைக்காதது போல் பாவனை செய்து, டக்கானோ டொக்கோ… டுக்கானா டொக்கா என வாய்க்குள் நுழையாத ஒலக இயக்குனர்களின் பெயரையெல்லாம் சொல்லிப் பிதற்றுகிறார்கள். பெண்கள் அமர்ந்திருக்கும் கூட்டம் என்கிற உணர்வில்லாமல் காது கூசுகிற அளவிற்கு கெட்ட வார்த்தைகள் பேசி பேருரை என்கிற அபத்தத்தை நிகழ்த்துகிறார்கள்.

மேலும், சினிமா மட்டும் தான் இந்த சமூகத்தைக் கேடாக்குகிறது என்று சொல்லி இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் பசப்பிக் கொண்டிருப்போம்.?

சினிமாவைத் தவிர, நாம் சார்ந்திருக்கிற, நம்மைச் சார்ந்திருக்கிற எல்லாமே இந்த சமூகத்தை உய்விக்கிறதா என்ன? சினிமாவும் ஓர் காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு சாதாரண புத்தகக் கடையின் விற்பனைக்கே எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்க வேண்டியிருக்கிறது. பல தளங்களிலிருந்து பல எண்ணங்களில் வரும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் மனோநிலையைக் கோருகிற வர்த்தக சினிமா என்னவாக இருக்க முடியும்? அவர்களின் மனோநிலையில் தான் இருக்க முடியும்.

பத்து வருடங்களுக்கு முன்பு வரை ‘லேட் பிக்கப்’ என்கிற ஓர் கலாச்சாரம் இருந்தது. தமிழில் ஓடிய ‘பாரதி கண்ணம்மா’, ‘சேது’, ‘அழகி’, ‘ஆட்டோகிராப்’ போன்ற படங்கள் அந்த கலாச்சாரத்தால் ஓடின. தேர்ந்த ரசனையும் அறிவும் இருக்கிற பார்வையாளர்கள் இரண்டாவது வாரத்தில் திரையரங்கத்திற்கு வரும் வரை படங்கள் திரையரங்கில் நிலைத்திருந்தன.

அப்படியான பார்வையாளர்கள், வெள்ளி, சனி, ஞாயிறு என்கிற மூன்று நாட்கள் மட்டுமேயான இப்போதைய கலாச்சாரத்தில் குறைந்திருக்கிறார்கள். இருபது வயதிற்குட்பட்டவர்களே பெருவாரியாக இருக்கிறார்கள். ஓப்பனிங் இருக்கிற நடிகர்களின் படங்களுக்கே அது வெளியாகும்போதோ அல்லது அடுத்த நாளோ திருட்டி சிடிக்கள் வந்துவிடுகிற பேராபத்தும், இணையங்களில் திருட்டுத்தனமாக வெளியாகிற கொடுமையும் அதிகமாக நிகழ்கிறது. அதனால்தான் வெள்ளி,சனி,ஞாயிறு என்கிற முதல் மூன்று நாட்களின் கலாச்சாரத்தையும், அது கொண்டிருக்கிற இளைஞர்களையும் குறிவைத்தே பெரிய நடிகர்கள், அதாவது ஓப்பனிங் இருக்கிற நடிகர்கள் இயங்க வேண்டிய கட்டாயமிருக்கிறது. அந்த இளைஞர்களின் ரசனையிலும் தேர்விலும் சினிமா மட்டுமே செல்வாக்கை செலுத்தவில்லை. ஓர் சினிமா மட்டுமே அவர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் கேடாக்கி விடும் அல்லது புனிதமாக்கி விடும் என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.
.
சில வருடங்களுக்கு முன்பு ஓர் பள்ளிக்கூடத்தில், ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள ஒரு சிறுமி, எல்லோரும் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீர் குடத்தில் கைவிட்டு தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டாள் என்பதற்காக அந்தப் பள்ளியின் ஆசிரியராலேயே தண்டிக்கப்பட்டு கண்களை இழந்தாள். அதை எந்த சினிமா சொல்லிக் கொடுத்தது.? இல்லை, “லஞ்சம் வாங்காதே” என்று சொல்லிய ‘இந்தியன்’ தாத்தாவைத் தான் பின்பற்றி விட்டோமா? “ஓட்டுக்கு காசு வாங்காதே” என்று சினிமாவில் சொன்னதால் காசு வாங்கி ஓட்டுப் போடாமல் இருந்தோமா?

சென்னையின் பெருவெள்ளத்தில் சிக்கி ஹெலிகாப்டரை நோக்கி பாலுக்காகக் கையேந்தியவன் தான் அடுத்த சில நாட்களிலேயே நடிகரின் கட்அவுட்டிற்கும் பால் ஊற்றுகிறான். குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்பு, கல்வி முறை,  அரசியல் சூழல், தொலைக்காட்சி நாடகங்களால் சீரழியும் பெற்றோர்கள், அக்‌ஷைய த்ரிதி முதல் அண்ணா ஹஸாரே போராட்டம் வரை அனைத்தையுமே ஒரே அளவில் ஊதிப் பெரிதாக்கி டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ளும் ஊடகங்களின் வர்த்தக யுக்தி, ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் அபத்தங்கள், அதன் தாக்கங்களில் நம் கல்வி நிலையங்களுக்குள் ஆசிரியர்களாலேயே நடத்தப்படுகிற பண்பாட்டுச் சீரழிவுகள் இவை எல்லாம் தான் இளம் தலைமுறையின் ரசனையயும் தேர்வையும் முடிவு செய்கிறது. இந்த அடிப்படைக் கட்டமைப்புகளைச் சரி செய்யாமல்.. அதற்கான வழிவகைகளைக் கண்டடையாமல் வெறுமனே சினிமா மட்டும் தான் சமூகத்தைக் கேடாக்குகிறது எனச் சொல்வது நியாயமற்றது.

ஒரு சராசரிப் பார்வையாளனைப் போல கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டங்களிலும் வசூலிலும் ‘நீ என்னவாக இருந்தாய்’ என்று மதிப்பிடுகிற கலாச்சாரத்தை வளர்த்து விட்டதில் பெரும்பங்காற்றிவிட்டு, அதற்கு காலம் முழுவதும் துணை நின்றுகொண்டே, சமூகத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும், திடீரென போலியாக கவலைகொள்வதும் ஒரு வகையான அரசியல் தான்.

– மீரா கதிரவன்

திரைப்பட இயக்குனர்