பேதங்கள் ஏதும் இல்லாத, அறிவு சார்ந்த அழகு சமூகத்தின் ஆறு நாட்கள்!

கடற்கரையில் பல பேர் குழு குழுவாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். குழுவுக்கு நடுவே மண் பறித்து, பள்ளம் தோண்டிக் கொள்கிறார்கள். அட்டைப் பெட்டி, கட்டை, சுள்ளி போன்றவற்றை போட்டு தீ மூட்டுகிறார்கள். இரவு நேர பனியை விரட்டிக் கொள்கிறார்கள். பல கிலோ மீட்டர்கள் நீண்ட கரையில் பல நூறு பேர் தூங்கிக் கிடப்பார்கள்.

‍‍‍‍‍‍சேவைசாலைக்கு வந்தால், ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் மைக் பிடித்து பேசிக் கொண்டிருப்பார். தூக்கம் அப்பினாலும் கூட்டத்தில் இருப்பவர்கள் கரகோஷம் எழுப்பிக் கொண்டிருப்பார்கள். ஆண், பெண், தலைவர், அவர், இவர் என்றெல்லாம் பேதம் இருக்கவில்லை. எவர் வேண்டுமானாலும் மைக் பிடிக்கலாம். பேசியவர்களும் ஜல்லிக்கட்டோடு தங்கள் ஆதங்கத்தை குறுக்கிக் கொள்ளவில்லை.

காவிரி, கூடங்குளம், நீட் என சமூக ஊடகம்தான் அங்கே மைக்கில் பேசிக் கொண்டிருந்தது. இந்திய அரசுகளின் தொடர் வஞ்சனை சுட்டிக் காட்டப்பட்டபோது தான் கரகோஷம் கொப்பளித்தது. பேசிய எவரும் மேடை பேச்சாளர் இல்லை. அப்படியான பேச்சுக்களை பட்டிமன்றங்களிலும் நம் வீட்டு அம்மாக்களிடமும் நீங்கள் கேட்டிருக்கலாம். வார்த்தை அலங்காரங்கள் இருக்கவில்லை. உண்மையும் வஞ்சிக்கப்பட்ட கோபமும் மாத்திரம் இருந்தன.

மொத்த நிகழ்வையும் வரலாற்றுடன் பொருத்திப் பார்த்து, அரசியல் சாத்தியங்களை அலசும் intellectual brainstorming session-களும் நடந்தன. ஆனால் அவர்களை intellectualகளாக நீங்கள் முன்பு யோசித்திருக்க மாட்டீர்கள்.

நீள முடி வளர்த்துத் திரியும் ஓர் இளைஞனாகவோ, நாடக பட்டறைகளில் நடிக்கும் சமூகத்திலிருந்து துண்டான வேறு தள நபராகவோ பார்த்திருப்பீர்கள். அவர்களும் அங்கேதான் கிடந்தார்கள். நிறைய விவாதித்தார்கள். பேக்குகளை தலைக்கு வைத்து, பெஞ்சுகளில் படுத்துக் கொண்டார்கள். அங்கு நடக்கும் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்து உள்வாங்குவார்கள். சந்தேகமோ, முரணோ ஏற்படின் கேள்வி கேட்பார்கள். பல தனி நபர் விவாதங்கள் நடந்தன. கருத்துகள் உருவாகின.

கடற்கரைக்குச் செல்லும் வழி நெடுக மாணவர்கள், இளைஞர்கள், திருநங்கையர் என பலர் நின்று நெரிசலை கட்டுப்படுத்துவார்கள். அத்தனை நெரிசலிலும் உங்கள் கேள்விகளை செவிமடுத்து பதிலுரைப்பார்கள். கேள்வி கேட்பவர்களும் எந்தவித கல்மிஷ குறும்பும் இல்லாமல், மதிப்போடுதான் கேள்வி கேட்பார்கள். சம்பந்தமே இல்லாமல் ஒரு குடும்பம் சாலையோரத்தில் நின்றுகொண்டு, வாகனதாரிகளுக்கு குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கிக் கொண்டிருப்பார்கள். வாகனத்தில் போகிறவரும் தான் குடித்து மிச்ச பாட்டிலை தூக்கி எரியாமல், தண்ணீர் கேட்கும் பக்கத்து வாகன குழந்தைக்குக் கொடுப்பார்.

நான்கு முக்கிய குழுக்கள் மைக் பிடித்தன என்றால், இன்னும் பலவை சிறுகூட்டங்களோடு மைக்கில் பேசிக்கொண்டிருந்தன. இன்னும் சிறிய குழுக்கள் பல தங்கள் அளவில் பத்து, பதினைந்து பேராக உட்கார்ந்து கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர். மாட்டின் மணல் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. மனுநீதி சோழனின் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்தது. அரசுகளுக்கு கோரிக்கைகளை கட்டித் தொங்கவிடும் மரம் இருந்தது. மைம் ஷோக்கள் நடத்தப்பட்டன. சிலம்பம் ஆடப்பட்டது. ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி கூட்டங்களில் நடனம் நிகழ்ந்தது.

கரையில் எங்கேனும் சென்று புகை பிடிப்போம் என்று நினைத்தவர் கூட அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு தயங்கினர். நெரிசலில் நடந்து செல்லும் பல பெண்கள் தெரியாமல் உரசி விட்டாலும், தன்னிச்சையாக ஒதுங்கி வழி விட்டோம். உண்பண்டங்கள் தொடர்ந்து வாகனங்களில் வந்து இறங்கிக் கொண்டே இருந்தன. சிறுநீர் கழிக்க பொறுமையாய் வரிசைகளில் காத்து நின்றனர். ஒரு குழந்தை தன் தலையில் கொம்புகளை மாட்டி, ‘வேணும் வேணும்.. ஜல்லிக்கட்டு வேணும்’ என முழங்கிக் கொண்டிருந்தது.

மாவோவின் நெடும்பயணம் படித்திருக்கிறேன். Occupy Wallstreet-ம் கேள்விப்பட்டிருக்கிறோம். அங்கெல்லாம் இவை சாத்தியப்பட்டதா என தெரியவில்லை. ஆனால் மெரினாவில் சாத்தியப்பட்டிருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரங்களும் அரசியல் வரலாற்று வகுப்புகள். பண்பாட்டு நிகழ்வு கொண்டாட்டங்கள். விவாதங்கள். அதிலும் நிலவொளியில் அரசியல் விவாதங்கள் எல்லாம் அத்தனை அழகானவை.

இரவில் திருவிழாக்களுக்குச் சென்று, தங்கி, விடிகாலை வேளைகளில் வீட்டுக்குத் திரும்பும் ஞாபக மிச்சத்தை மெரினாவில் பிரதியெடுத்துக் கொண்டிருந்தனர். தங்கள் பணம் தேடும் நுகர்வு வாழ்வுகள், அரசியலிலிருந்தும் சமூகத்திலிருந்தும் என்னதான் அப்புறப்படுத்தியிருந்தாலும், அவற்றை நோக்கி மீண்டும் ஓடிவரும் விழைவு கரையெங்கும் நிரம்பியிருந்தது. நற்சிந்தனையும் ஒழுக்கப் பண்புகளும் தூக்கிப் பிடிக்கப்பட்ட இடத்தில் நம் அழுக்கு சிந்தனைகளை ஒதுக்கி நல்லவற்றையே எடுத்து பாவித்தோம். பல தனி விவாதங்களில் நம்மிலிருந்து வேறொரு நம்மை கண்டெடுத்து அடைந்தோம்.

இந்த போராட்டத்துக்கு நமக்கு ஜல்லிக்கட்டு தேவை என்ற கோரிக்கை இருக்க வேண்டியதில்லை. இது ஒரு இயங்குதளம். நீங்களும் நானும் கற்பனையில் விரும்பி யாசிக்கும் ஒரு சமூக தளம். பூம்புகாரின் இந்திரவிழாவை ஒட்டி போராட்டம் நடந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும். தவறுகள் நடப்பின் அங்கேயே தட்டிக் கேட்கப்பட்டன. உணர்த்தப்பட்டன. திட்டம் போட்டு நம்மை வீழ்த்தி, நம் மனங்களுக்குள் இருந்த அறச்சிந்தனையை மழுங்கடித்து, வெற்று மனிதர்களாக மாற்றிப் போட்ட சமூக போக்குக்கு எதிரான கேவல்தான் இப்போராட்டம்.

தொடங்கப்பட்டபோது கூட இந்த வடிவம் எவருக்கும் தோன்றி திட்டமிடப்பட்டிருக்காது. ஆனால், மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய பின், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு வழிகாட்டுதல்களைக் கொண்டு மட்டுமே இத்தனை நேர்த்தியை, யதேச்சையாக உருவாக்க முடிகிறதெனில், அந்த யதேச்சையை நமக்குள் எங்கோ ஓர் ஓரமாக நாம் பாதுகாத்து வைத்து வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

அரசை இந்த போராட்டங்கள் அச்சுறுத்தவே செய்யும். வரலாற்றில் இடம் பெறுகிறதோ இல்லையோ, ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதோ இல்லையோ, நம் அகங்கள் தாங்கி இருக்கும் இனக்குழு வாழ்க்கையின் நினைவை இந்த போராட்டம் மீட்டெடுத்தது. அந்த நினைவை அறிவுதளத்தில் இருந்து விவாதித்து உரிமை பேசினோம். ஒரு போராட்டத்தை அழகிய நினைவாக இப்போது உருவாக்கிக் கொண்டுவிட்டோம். நினைவு என்பது பல நினைவுகளை தொடர்ந்து உருவாக்க வல்லது.

பேதங்கள் ஏதும் இல்லாத, அறிவு சார்ந்த அழகு சமூகத்தின் ஆறு நாட்கள் அவை.

RAJASANGEETHAN JOHN