தமிழக தேர்தல் வாக்குப்பதிவு – 74.26 சதவீதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகள் நீங்கலாக 232 தொகுதிகளில் திங்களன்று நடைபெற்றது.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், திங்கள் இரவு, 232 தொகுதிகளிலும் மொத்தம் 73.76 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார்.

ஆயிரத்து 221 வாக்குச்சாவடிகள் மலைப்பகுதிகளில் இருந்ததாலும், மழையால் பல பகுதிகளிலிருந்தும் முழுமையான வாக்குப்பதிவு விவரங்கள் கிடைக்காததாலும், இறுதிக்கட்ட வாக்குச்சதவீதம் செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவதும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலை (78.01) விட 3.75 சதவீதம் குறைவாகும்.

வாக்குப்பதிவு சதவீதத்தை பொறுத்தவரை, மாவட்டங்கள் அடிப்படையில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 85.03 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தலைநகர் சென்னையில் 60.99 சதவீதம் மட்டுமே பதிவாகியிருந்தது.

தொகுதி அடிப்படையில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 88.49 சதவீதமும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, தர்மபுரி (85.03), அரியலூர் (83.77), கரூர் (83.09), திருவண்ணாமலை (82.99), நாமக்கல் (82.10), சேலம் (80.09) ஆகிய 6 மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. 20 மாவட்டங்களில் 70- 80 சதவீதமும், 5 மாவட்டங்களில் 60- 70 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.