தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறப்பு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை புரிந்துள்ளனர்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இடையில் தொற்று குறைந்தபோது ஒருசில பள்ளி வகுப்புகள், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்குக் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், மீண்டும் தொற்று அதிகரித்ததால் அவை மூடப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை குறைந்து, தினசரி தொற்று எண்ணிக்கை சராசரியாக 1,500 என்ற அளவில் இருந்து வருகிறது.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிபுணர்களிடம் கருத்து கேட்டு வந்த தமிழகப் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை, பள்ளி, கல்லூரிகளை இன்று (செப். 01) முதல் திறக்க முடிவு செய்தது. அதன்படி, பள்ளிகளில் 9-12 ஆம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களுக்கும் திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பள்ளிகள், கல்லூரிகள் 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வாரம் 6 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முகக்கவசம் அணிதல், ஆசிரியர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என, வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்நிலையில், அறிவித்தபடி இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நீண்ட மாதங்களுக்குப் பின் பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ள நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை புரிந்துள்ளனர்.