”பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கும்!” – முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (செப். 02) பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பொதுத்துறை நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ள அனைவருடைய சொத்து. பொருளாதார வளர்ச்சிக்கும் சிறு, குறு தொழிலுக்கும் ஆணிவேராக இருப்பது பொதுத்துறை நிறுவனங்கள்தான். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. இம்முடிவைத் தமிழகம் கடுமையாக எதிர்க்கும்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் முடிவைக் கைவிடக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதவுள்ளேன். லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பொதுச் சொத்துகளை விற்பனை செய்வதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு நல்லதல்ல” என்று தெரிவித்தார்.