“தனுஷூக்கு மெயின் வில்லன் நான் தான்!” – ‘தொடரி’ கமாண்டோ ஹரிஷ் உத்தமன்

பிரபுசாலமன் இயக்கத்தில், தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகும் படம் ‘தொடரி’. “இதில் தனுஷூக்கு மெயின் வில்லனாக நான் நடித்திருக்கிறேன்” என்கிறார் ஹரிஷ் உத்தமன்.

‘தா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு நடிகராக அறிமுகமானவர் இவர். தொடர்ந்து ‘பாண்டிய நாடு’, ‘மீகாமன்’, ‘தனி ஒருவன்’, ‘பாயும் புலி’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர். தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் ‘றெக்க’, நயன்தாரா நடிக்கும் ‘டோரா’, விஜய் நடிக்கும் ‘பைரவா’ ஆகிய படங்களில் நடித்துவருபவர். கடந்த வருடம் தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக ‘ஸ்ரீமந்துடு’ படத்தில் நடித்து அங்கும் பெயர் வாங்கியிருப்பவர்.

‘தொடரி’ படத்தில் நடித்தது பற்றி ஹரிஷ் உத்தமன் கூறுகையில், “தொடக்கம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க ரயிலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ‘தொடரி’. கதை முழுவதும் ரயிலிலேயே நடக்கிறது என்று இயக்குனர் பிரபுசாலமன் சொன்னவுடனே, இதில் நடித்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். காரணம், பயணம் எனக்கு பிடித்த விஷயம்.

டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணிக்கும் ஒரு கமாண்டோ கதாபாத்திரத்தில் இதில் நான் நடித்திருக்கிறேன். இந்த பயணத்தில்போது ஏற்படும் ஒரு சூழலும், அதன் விளைவுகளும் தான் ‘தொடரி’ படம். இந்த படம் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் என திடமாக நம்புகிறேன்” என்கிறார்.

தன்னை பற்றி அவர் கூறுகையில், “கோவை அருகே உள்ள வாளையாறு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். ஹைஸ்கூலில் படிக்கும் வரை கூட எனக்கு ஆங்கிலத்தில் சரியாகப் பேச வராது. கோவை கல்லூரியில் படித்தபோதுதான் என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

அதன்பின் எம்பிஏ படித்தேன். வேலையில் சேர முயன்றேன். விமானத்தில் ‘கேபின் க்ரூ’வில் ஐந்து வருடங்கள் பணியாற்றினேன். என் அண்ணனின் நண்பர் என்னிடம் நடிக்க வருகிறாயா? எனக் கேட்டார். கல்லூரியில் படித்தபோது கொஞ்சம் மாடலிங்கும் செய்ததால் சரி என்றேன். அப்படித்தான் ‘தா’ பட வாய்ப்பு வந்தது.

‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகுதான் என்னைப் பற்றி பலருக்கும் தெரிய வந்தது. அடுத்து பல பெரிய படங்களில் நடித்து வருவதால், அவை எனக்கு மேலும் திருப்புமுனையைத் தரும் என எதிர்பார்க்கிறேன்.

ஹரிஷ் என்பதுதான் என் இயற்பெயர். அப்பாவின் பெயர் உத்தமன். அப்பாவின் ஞாபகார்த்தமாக அவருடைய பெயரை என் பெயருடன் சேர்த்துக்கொண்டேன்” என்கிறார்.

தந்தையை மதிக்கும் இந்த தனையனுக்கு இன்னும் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.