காவிரி பிரச்சனை: தனுஷின் ‘தொடரி’ வெளியாவதில் சிக்கல்!

காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கடந்த 5ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கர்நாடக பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் நடத்தும் இந்த போராட்டத்தில் தமிழக பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தீயிட்டுக் கொளுத்துவது, தமிழர்களையும், தமிழர்களின் வர்த்தக நிறுவனங்களையும் அடித்து நொறுக்குவது என வன்முறை தலைவிரித்து ஆடுவதால், அங்கு தமிழ்ப் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ‘தொடரி’ திரைப்படம் நாளை கர்நாடக மாநிலத்தில் வெளியிடப்பட மாட்டாது என இப்படத்தின் கர்நாடக மாநில விநியோகஸ்தர் மஞ்சுதா கூறியுள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “எங்களுக்கு நஷ்டமானாலும், தற்போதைய சூழலில் ‘தொடரி’ படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியாது. காவிரி பிரச்சனைக்காக நடக்கும் போராட்டம் ஓயாதவரை கர்நாடாகாவில் தமிழ்ப் படங்களை திரையிடுவது சாத்தியம் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.