“உலக சினிமாவின் பார்வை தற்போது தமிழ் சினிமா பக்கம்”: பிரகாஷ்ராஜ் பெருமிதம்!

மிக யதார்த்தமான படைப்பாளிகளில் ஒருவராக கருதப்படும் இயக்குனர் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’ திரைப்படம், 74 வது ஆண்டு கோல்டன் குளோப் விருதின் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகினருக்கும் இது ஒரு மகத்தான தருணம்.

‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ சார்பில் டாக்டர் கணேஷ், ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ சார்பில் இயக்குனர் விஜய் இருவரும் இணைந்து  தயாரித்திருக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், நாசர், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரங்களிலும், வருண், சண்முகராஜன், எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலிராவ், பாண்டியன் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.

0a

பாடல் எதுவுமின்றி உருவாக்கப்பட்டிருக்கும் ‘சில சமயங்களில்’   23 நாட்களில் படமாக்கப்பட்டிருப்பது ஒரு சாதனையே. பின்னணி இசையை பிரமாதப்படுத்தும் இளையராஜா, எழில்மிகு காட்சிகளை யதார்த்தமாக படமாக்கும் ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர், புகழ் பெற்ற கலை இயக்குனர் சாபு சிரில், படத்தொகுப்பாளர் பீனா பால் என பல சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றியிருப்பது இதன் சிறப்பு.

0a1h

74 வது ஆண்டு கோல்டன் குளோப் விருதின் இறுதிச்சுற்றுக்கு ‘சில சமயங்களில்’ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகையில், “ஞானமும், திறமையும் ஒருசேர பெற்ற ஓர் உன்னதமான படைப்பாளி, இயக்குனர் பிரியதர்ஷன். கோல்டன் குளோப் விருது மட்டுமின்றி,  அதற்கு மேல் இருக்கும் அனைத்து விருதுகளையும் பெறும் தகுதியும், திறமையும் பிரியதர்ஷனுக்கு  இருக்கிறது…உலக சினிமாவின் பார்வை தற்போது தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கு காரணம் பிரியதர்ஷன். தமிழ் சினிமாவுக்கு  ‘சில சமயங்களில்’ திரைப்படத்தை அர்ப்பணிப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்” என்றார்.

இயக்குனர் பிரியதர்ஷன் கூறுகையில், “திரைப்படம் உருவாக்குவதில் இரண்டு முறைகள் இருக்கிறது. ஒன்று, நம்முடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக திரைப்படத்தை உருவாக்குவது. மற்றொன்று, நம் உள்ளத்தில் உதயமான கதையை நமக்காகவே உருவாக்குவது. ‘காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு, என் உள்ளத்தில் இருந்து இரண்டாவது முறையில் உருவானதே ‘சில சமயங்களில்” என்றார்.