நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு பிறந்தநாள்: கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு பிறந்தநாள். மொழிவாரி மாநிலம் அமைந்து, வரும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு 60 வயது பூர்த்தியாகிறது. இதனையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க ஆண்டில் மிகுந்த மனமகிழ்ச்சியோடு தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு, மொழிவாரி மாநிலம் அமைய அரும்பாடுபட்ட நமது முன்னோர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தோழர் ஜீவா, திரு.மபொசி, பெருந்தலைவர் காமராஜர், திரு.நேசமணி, தோழர் சங்கரலிங்கனார் என இன்னும் எண்ணற்றவர்களையும் நினைவு கொள்கிறோம்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னரே இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய மிக முக்கிய மாகாணங்களில் சென்னை முதன்மையானது. விடுதலைப் போரிலும், ஒற்றுமை உணர்விலும் சிறந்து இருந்தது. சென்னை மாகாணம் என்ற பெயர் மாற்றி தமிழ்நாடு என பெயர் சூட்டவும், எல்லைகளை வரையறை செய்யவும் தமிழகத்தின் இடங்களை தமிழ்நாட்டோடு இணைப்பதற்காகவும் நடைபெற்ற ஏராளமான போராட்டங்களையும் நினைவு கூர்கிறோம்.

சென்னை திருத்தணியை நமக்கு பெற்றுத் தந்த வடக்கு எல்லைப் போராட்டம், கன்னியாகுமரி, செங்கோட்டையை தமிழகத்தோடு இணைக்க நடந்த குமரி எல்லைப் போராட்டம், விலைமதிப்பற்ற உயிரைக்கொடுத்த உண்ணாநோன்பு அறப்போராட்டம் என எண்ணற்றப் போராட்டங்கள்.

பின்னர், அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான திமுக அரசு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டியதும் நினைவில் கொள்கிறோம். மொழிவழி மாநிலம் அமைந்தப் பின்னரும் எல்லை வரையறைகளில், நதிநீர்ப் பிரச்சனைகளில் சிக்கல் நீடிக்கிறது.

மொழிவாரி மாநிலம் அமைந்து 60 ஆண்டுகளில் தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும் வேலையின்மை, ஏழ்மை ஆகியவை அதிகரித்தவண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் எனும் மக்கள் நல்வாழ்வியலில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழக மீனவர்களின் துயர், குறிப்பாக இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் படும் துயரங்கள் தீர்ந்தப்பாடில்லை. திரட்டப்படாத ஏழை எளிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் கிடப்பில் உள்ளது. மத உணர்ச்சிகளை தூண்டுவதிலும, சாதியின் பெயரில் நடைபெறும் ஆணவ கொலைகளும், முன்னிலும் அதிகமான சமூக நீதிக்கான போராட்டங்கள் தேவை என்பதை உணர்த்துகிறது. நாட்டின் செல்வவளங்கள், இயற்கை வளங்களும், பெரும் மூலதன முதலாளிகளுக்கு திறந்துவிடும் ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால், சுரண்டல் முறைகளால் வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை நீடிக்கிறது.

யாதும் ஊரே, யாவரும் கேளீர் எனும் தமிழ்சமூக உயர் மரபில் தமிழகம் பொதுவுடமை நோக்கி பயணிக்க நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.