ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகம் திரளுகிறது!

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும் வழக்கம் போல் முதல் குரல் கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன்.

அவரை தொடர்ந்து சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு, விவேக், அசோக் செல்வன், ஆர்ஜே. பாலாஜி, இயக்குனர்கள் சீமான், வ.கௌதமன், இசையமைப்பாளர்கள் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர்கள் தாமரை, அருண்ராஜா காமராஜ் என தமிழ் திரையுலகின் பிரபலங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளத்தில் ஒருங்கிணைந்த அம்சம். நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். நமக்கு ஜல்லிக்கட்டு தேவை” என பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன், “ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு. அதை மீட்க விரும்பும் பல கோடி பேரில் ஒரு தமிழனாய் நானும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக “கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற பெயரில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து உருவாக்கிய பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இப்பாடல் மூலம் கிடைக்கும் பணத்தை தமிழக விவசாயிகளுக்கு கொடுக்கப்போவதாக இவர்கள் அறிவித்துள்ளார்கள்.