சுவாதி படுகொலை புகைப்படமும், ‘மெட்ரோ’ திரைப்படமும்!

ஜூன் 24ஆம் தேதி. வெள்ளிக்கிழமை. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் சுவாதி, கயவன் ஒருவனால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

நெஞ்சம் பதறச்செய்யும் இக்கொடிய சம்பவம் காரணமாக ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் சடலத்தை அனைத்து ஊடகங்களும் படம் பிடித்தன. ஆனால், அப்படத்தை தங்கள் ஊடகங்களில் வெளியிடும்போது, சுவாதியின் ரத்த வெள்ளத்தை ‘மாஸ்க்’ செய்து மறைத்து, அல்லது தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட படத்தை மட்டும் வெளியிட்டு, மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டன. (பார்க்க: மேலே உள்ள படம்.)

ஆனால், வக்கிரம் பிடித்த எவனோ ஒரு நாதாரி மட்டும், ரத்த வெள்ளத்தில் அலங்கோலமாகக் கிடக்கும் சுவாதியை க்ளோசப்பில் படம் பிடித்து, அதை ‘மாஸ்க்’ செய்யாமல் அப்படியே சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிவிட்டான். வெட்டுப்பட்ட கழுத்திலும், தாடையிலும் சதை பிளந்திருப்பது, அந்த சதைப் பிளவுகளிலிருந்து ஊற்றெடுத்துப் பொங்கிய ரத்தம் உறைந்திருப்பது, தரையில் வெள்ளமென பெருகிக் கிடக்கும் ரத்தத்தின் நடுவே சுவாதியின் முகம் கோரமாக கிடப்பது… என அப்பட்டமாக அனைத்தும் தெரிகின்றன அந்த படத்தில்.

சமூகவலைத்தளத்தில் அப்படத்தைப் பார்த்த பலரும் ஆவேசம் அடைந்து, அக்கொலைகாரனுக்கு இணையாக, அப்படத்தை எடுத்து வெளியிட்ட வக்கிரபுத்திக்காரனுக்கும் கண்டனம் தெரிவித்தார்கள். கீதப்பிரியன் கார்த்திகேயன் வாசுதேவன் என்பவர் இது தொடர்பான தனது பதிவில்,

“அருமை நட்புகளே!

தயவு செய்து ரத்த வெள்ளத்தில் அலங்கோலமாக இறந்து போனவர்களின் ‘க்ரைம் சீன்’ படத்தை உங்கள் தளங்களில் வெளியிடாதீர்கள்.

நம் எல்லோருக்கும் மரியாதையான, அமைதியான மரணம் தான் விருப்பமாக இருக்கும். அது வாய்க்காமல் இறந்தவரை, இப்படி விசேஷ லென்ஸ் போட்டு சுற்றிச் சுற்றி படம் எடுத்து, மீண்டும் மீண்டும் அதை தங்களது தளங்களில் வெளியிடுவது ஒருவித perversion.

அதை தயவு செய்து செய்யாமல் இருப்போம். அந்தப் பெண்ணின் ஆத்மா நல்ல படியாக கரையேறி அமைதி கொள்ளவும், குற்றவாளி விரைவில் தண்டிக்கப்படவும் பிரார்த்திப்போம்.

நண்பர்கள் அப்படங்களை எச்சரிக்கை popup ஐ மீறிப் பார்த்து மீளா மன உளைச்சல் அடையாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

நிஜவாழ்க்கையில் நிகழ்ந்ததாகவே இருந்தாலும், வன்முறையால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் தோய்ந்த கோர முகத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டுவது வக்கிரம் என்பதையும், அதை பார்ப்பவர்களுக்கு அது மீளா மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதையும் இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

சுவாதி படுகொலை செய்யப்பட்ட அதே ஜூன் 24ஆம் தேதி. வெள்ளிக்கிழமை. சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் நடிப்பில், ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய ‘மெட்ரோ’ திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த படம் முழுக்க வன்முறைக் காட்சிகளை வக்கிர புத்தியுடன் அகோரமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்.

எடுத்த எடுப்பிலேயே கொடிய வன்முறைக் காட்சியுடன் தான் படம் ஆரம்பமாகிறது. நாயகன் சிரிஷ் ஹீரோயிசம்(!) காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட காட்சி அது. ஒருவனை கடுமையாகத் தாக்குகிறான் நாயகன். தாக்கப்பட்டவன் மண்டை உடைந்து, முகத்தில் ரத்தம் ஆறாக வழிகிறது. இதை பல கோணங்களில், பல நிமிடங்கள் காட்டியிருக்கிறார் வக்கிரபுத்தி இயக்குனர். படம் முழுக்க இத்தகைய காட்சிகள் நிறைய. மனித ரத்த நாற்றமடிக்கும் இந்த ‘மெட்ரோ’ படத்தை பார்த்தபின் உங்களுக்கு தலை சுற்றலோ, மயக்கமோ, மன உளைச்சலோ ஏற்படவில்லை என்றால், நீங்கள் கூலிப்படையில் சேர முழுத்தகுதி படைத்தவர் தான்; சந்தேகமில்லை!

கேட்டால், “வன்முறையை யதார்த்தமாக காட்டியிருக்கிறேன்” என்கிறார் இயக்குனர், நாக்கில் நரம்பில்லாமல். இவருக்கும், சுவாதியை க்ளோசப்பில் படம் பிடித்து மக்களுக்குக் காட்டிய வக்கிரபுத்திக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?

வன்முறைக் காட்சி கோரமானது தான் – திரைப்படத்தில் மட்டும் அல்ல; நிஜ வாழ்க்கையிலும் தான். ஆனால், திரையில் வன்முறைக் காட்சி தோன்றினாலே அச்சத்துடன் கண்களை மூடிக்கொள்கிற, அல்லது தலையைக் குனிந்துகொள்கிற பார்வையாளர்கள், குறிப்பாக பெண்கள், ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்றால், அதில் வன்முறைக் காட்சி எப்படி பொறுப்புணர்வுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்? தெரியவில்லையா? போய் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ பாருங்கள். கோவிந்த் நிகாலினியின் ‘ஆக்ரோஷ்’ பாருங்கள். இது போல் சமூக அக்கறையுடன் வன்முறையை பொறுப்புடன் காட்சிப்படுத்திய பல படங்கள் இருக்கின்றன. போய் பாருங்கள்.

அதை விடுத்து, கூலிப்படையில் சேர்ந்து குப்பை கொட்ட வேண்டிய வக்கிர புத்திக்காரனெல்லாம் சினிமா எடுக்க வந்தால், அவனது சினிமா எப்படி இருக்கும்…?

‘மெட்ரோ’ போல் இருக்கும்!

– அமரகீதன்