ரூ.100 கோடி வசூலித்த ஹிந்திப்படம் தமிழில் வெளியாகிறது: நாயகி சன்னி லியோன்!

இந்தியத் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக கடந்த 17 வருடங்களாக இயங்கிவரும் ஸ்ரீபாலாஜி மோஷன் பிக்சர்ஸ் படநிறுவனம், சுமார் 100 கோடி ரூபாய்க்கு  மேல் வசூலை வாரிக் குவித்த ‘ராகினி எம்.எம்.எஸ் 2’ என்ற ஹிந்தி படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ‘ராத்ரி’ என்ற பெயரில் மொழிமாற்று (டப்பிங்) செய்து வெளியிடுவதன் மூலம், தென்னிந்திய திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறது.

பிரபலமான இந்தி நடிகர் ஜிதேந்திராவின் இந்த தயாரிப்பு நிறுவனம், தொலைக்காட்சி தொடர் தயாரிப்பிலும் முன்னணியில் இருக்கிறது.

‘ராத்ரி’ படத்தில் கதாநாயகியாக “கவர்ச்சி புயல்” சன்னி லியோன் நடித்திருக்கிறார். அவருடன் ‘சாமுராய்’ புகழ் அனிதா, பர்வீன் தபாஸ், சந்தியா மிருதுல், கரண் தாலுஜா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

பூஷன் பட்டேல் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சித்ரஞ்சன் பட், மீட்பராய் அஞ்சான், யோ யோ ஹனிசிங், பிரனாய் ரிஜியா, அமர் மொஹைல் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.

‘ராத்ரி’ படத்தின் வசனம் மற்றும் பாடல்களை ஆதிராஜன் எழுதியிருக்கிறார். வசனம் உதவி – நந்து.

பேய்பங்களா ஒன்றுக்கு படப்பிடிப்பு நடத்தச் செல்லும் படக்குழுவினர் அங்கிருக்கும் பேயால் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் ‘ராத்ரி’ படத்தின் கதை. திகில் காட்சிகள் பல கோடி ரூபாய் செலவில் கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருக்கின்றன.

ஹிந்தி படத்தில் சன்னி லியோன் நடனமாடிய “பேபி டால்” என்ற சூப்பர் ஹிட் பாடலை இதுவரை சுமார் 8 கோடி பேர்  யூடியூப்-ல் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இப்பாடல் “ஜொலி ஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு… தெறி தெறிக்கப் பார்த்தா ஜின்னு“ என தொடங்கும் பாடலாக மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதை பிரபல நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார். “பை பை பை… கலாச்சி பை” என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியவர் ரம்யா நம்பீசன் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு பாடலை பாலாஜிஸ்ரீ பாடியுள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ராத்ரி’யை ஷோபா கபூர், ஏக்தா கபூர் ஆகியோர் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர்.