திணைகள் தொலைத்து இன்று வெய்யில் வாங்கியது யார்?

ஞாயிறு போற்றிய இளங்கோவின் பேரப்பிள்ளைகளை

வெய்யில் வெளியே செல்லாதீர்கள்
அக்கறையோடு ஆணையிடுகிறார்
ஆட்சியர்

வேலைத்தலம் செல்லாமல்
பிள்ளைகளின் சோற்றுத் தட்டுகளில்
எதை இடுவதென சொல்லவில்லை

எம் பூட்டன் பாட்டன் எந்தை
தந்ததில்லையே இவ்வெய்யில்

அவர்கள் குளம் வெட்டியவர்கள்
கரைகளில் ஆலும் அரசும் வளர்த்து
அடியில் தெய்வங்கள் அமர்த்தியவர்கள்

ஆறுகளில் மீன்பிடித்து சுவைத்தவர்கள்
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே
பிள்ளைகளுக்குச் சொல்லியவர்கள்

வீட்டு முற்றங்களில் வயல் வரப்புகளில்
சாலையின் மருங்குகளில்
மரம் வளர்த்தவர்கள்

அதன் கிளைகளில் குழவிகளுக்குத்
தூளிகட்டியவர்கள்

குளிர்ந்த தெங்கின் நிழலில் அமர்ந்து
இல்லக்கிழத்தி கொண்டுவந்த கூழை
வெங்காயம் கடித்துக் குடித்தவர்கள்

கடவுளுக்கும் அதே கூழையே
பழக்கியவர்கள்

கால்நடைகளுக்கும் சூடு பரவாமல்
நீர்நிலைகளில் கால்நனைக்கச் செய்தவர்கள்

விருந்துகளுக்கு நுங்கும் இளநீரும் சீவி
உறவைக் குளிர வைத்தார்கள்

பருத்தியில் இழைத்த வேட்டியில்
ஒரு நூல் துண்டில் மானம் காத்தவர்கள்

சின்னச் சிமினிகளில்
இருள் விரட்டியவர்கள்

மகனெழுதிய கடிதங்களை
கண்கள் பூக்கக் கேட்டவர்கள்

நடந்தார்கள் மிதிவண்டி மிதித்தார்கள்
தூரதேசமென்றால் பேருந்தில் பயணித்தார்கள்

இப்படித்தானே நமக்கு குறிஞ்சியை
முல்லையை மருதத்தை நெய்தலை
பாலையை விட்டுச்சென்றார்கள்

பாலை தவிர்த்த திணைகள் தொலைத்து
இன்று வெயில் வாங்கியது யார்

குளமில்லாமல் நதியில்லாமல்
காடில்லாமல் மலையில்லாமல்
மரமிலாமல் பாடும் பறவையில்லாமல்

கடவுளில்லாமல் நீதியில்லாமல்
நம் நிலத்துக்கு வந்த வெய்யில் இது

தவணைமுறையில் ஏசி வாங்கி
குளிர்சாதனப் பெட்டி வாங்கி
கோக் வாங்கி பெப்ஸி வாங்கி

ஐஸ்க்ரீம் வாங்கி
நெகிழி உறையில் லஸ்ஸி வாங்கி
கார்காலம் செய்யலாமென

டிவி சொன்ன பொய்களில்
பூத்தது இந்த வெய்யில்

மேற்குலக அதிபர்களுடன்
தமது கருப்புக் கைகளை
தாழ்வுணர்வோடு குலுக்கி

செய்து கொண்ட ஒப்பந்தங்களில்
விளைந்தது இவ்வெய்யில்

மலையைக் குடைந்த பெருச்சாளிகள்
நமது நீதி நூல்களையும் அறித்துத்
தின்றதால் சுடும் வெயில் இது

ஆற்றை விற்ற காசில் தேர்தல் திருவிழா கொண்டாடும் அறியாமையில்
கனன்ற வெய்யிலிது

வெயிலை விற்றவர்கள்
குற்றவாளிகளென்றால்
வாங்கிய நாம் மட்டும் எப்படி
நல்லவர்களாக முடியும்

இப்போது..
நம் பிள்ளைகளை குளிரும் ஏசி
அறைகளில் பாதுகாக்கலாம்

இல்லை..
வீதியின் வெய்யில் நனைத்து
கோபம் பழக்கலாம்

என்ன செய்யப் போகிறோம்?

– கரிகாலன்