யோக்கியனுங்க வராங்க… சொம்பு பத்திரம்…!

‘தமிழ்நாட்டை எந்த மோதலும் இல்லாத அமைதியான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ – இது பாமக நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ‘சமூக நீதி’ என்னும் தலைப்பில் அவர்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளில் ஒன்று. இதை படித்தவுடன் சிலருக்கு சிரிப்பு வரலாம், சிலருக்கு கோபம் வரலாம். என் நினைவில் வந்ததெல்லாம் குச்சுகொளுத்தி ராமதாஸ் கும்பலால் எரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சேரிகளும், சாதி மறுத்து காதல் மணம் புரிந்ததால் கொல்லப்பட்ட இளைஞர்களின் முகங்களும் தான்.

தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் நலன் என்னும் தலைப்பின் கீழ், ‘தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்புக்கூறு திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும்’ என்று சொல்கிறார்கள். இந்த தலைப்பில் ‘மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அநீதிக்கு முடிவு கட்டப்படும், அரசு வேலை, கல்வி உதவித் தொகை’ என்று மொத்தம் ஐந்து அறிவிப்புகள் இருக்கிறது. அட எல்லாமே நல்லாத்தானே சொல்லியிருக்காங்க என்று அப்பாவியாக கேட்பவர்களுக்கு, இதைச் சொல்லியிருப்பவர்கள் யார் என்பதை நினைவுபடுத்துகிறேன். ‘அனைத்து சமுதாய இயக்கம்’ என்ற பெயரில் தலித்தல்லாத 60க்கும் மேற்பட்ட சாதிகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு முழுக்க மாவட்டவாரியாக கூட்டம் போட்டு தலித்துகளுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ் நடத்தும் இந்துத்துவ மதவெறி பயிற்சி கூட்டங்கள் போல இது சாதிவெறியை பயிற்றுவிக்கும் வகுப்புகளாக ராமதாஸ் நடத்தினார். ராமதாசின் இந்த பயிற்சி கூட்டத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் தான் ‘தலித் பேருந்து நடத்துனரிடம் டிக்கட் வாங்க கூடாது’ என்று பேசும் செங்குட்டுவன் வாண்டையாரும், பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் போன்று தலித் இளைஞர்களை சாதி ஆணவக் கொலைகளை செய்தவர்களும், தமிழகமெங்கும் நூற்றுக்கணக்கான சேரிகளை கொளுத்திய கும்பல்களும்.

இவர்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் எல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான். அவற்றை சரியாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதற்குரிய சிறப்பான சட்ட பாதுகாப்பை வழங்குவது தான் ‘எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்’ ஆகும். ஆனால் இந்த வன்கொடுமைகள் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு மூலம் வழக்கு தொடுத்தது பாமக. ஆனால் கடுமையான கண்டங்களை தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். நேற்றைக்கு இந்த தேர்தல் அறிக்கையை வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் ராமதாசிடம் நிருபர்கள் கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறார்கள். ‘சாதி ஆணவ படுகொலைகள் தொடர்பான அறிவிப்பு எதுவும் உங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லையே. ஏன்?’ என்பது தான். எல்லோரும் தான் பேசுகிறார்களே, அதனால் தான் விட்டுவிட்டோம் என்று பொருள்படும்படி பதில் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். சாதி மறுத்து காதல் மணம் புரிந்ததால் கொல்லப்பட்ட தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் குறித்தான பத்திரிக்கையாளர் கேள்விக்கு அதெல்லாம் முக்கியமில்ல என்று சிரித்துக் கொண்டே சொல்லிய ராமதாசிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

பள்ளிக்கூடத்தில் ‘நான் முதல்வரானால்..’ என்ற தலைப்பில் மாணவர்கள் எழுதிய கட்டுரையை படிப்பது போன்று தான் எனக்கு இவர்களின் தேர்தல் அறிக்கையை படிக்கும்போது தோன்றியது. ‘என் அப்பா யார் தெரியுமா?’ ‘நான் யார் தெரியுமா?’ என்று வகுப்பில் உடன் படிக்கும் எளிமையான, பலவீனமான மாணவர்களை அடித்து, மிரட்டி அதிகாரம் செலுத்தி சேட்டை செய்யும் மாணவனின் கட்டுரையை திருத்தப்போகும் மற்ற ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து எச்சரிக்கை செய்வது போல தான் என்னுடைய இந்த பதிவு.

– வன்னி அரசு

விடுதலை சிறுத்தைகள் கட்சி