1400 ஆண்டு கால வரலாறு கொண்டது ‘தோழர்’ எனும் உறவு!

ஆண்டான் – அடிமை காலத்தில் அடிமை முறையினை ஒழிக்க, ஆதிக்கத்தில் இருந்த திருச்சபைக்கும், அரசனுக்கும் எதிராக கலகம் செய்த கலகக்காரர், சிலுவையில் ஏற்றி கொல்லப்பட்ட புரட்சியாளர் “இயேசு” கூட தன்னுடன் இணைந்து நின்ற சக போராளிகளை ‘சீடர்கள்’ என்று குறிப்பிட்டதாகவே வேதாகமம் கூறுகிறது.

1400 ஆண்டுகளுக்குமுன், பாலைவன காட்டரபிகளின் மனிதத்துக்கு எதிரான அடிமை முறை, பெண்ணடிமைத்தனம், விபச்சாரம், வட்டி போன்ற சமூகக் கொடுமைகளையும், சிலை வணக்கம் போன்ற மூடத்தனங்களையும் எதிர்த்து நின்று, ஆயுதமேந்திய யுத்தத்தால் ஒரு புரட்சிகர அரசினை நிறுவிய, இறுதி நபி என அழைக்கப்படும் முகமது நபியவர்கள்தான் முதன் முதலாக தன்னுடன் உறுதுணையாக நின்று போரிட்ட தம் சகாக்களை “தோழர்கள்” என்றழைத்தார்.

எங்கெல்லாம் சமூகக் கொடுமைகள் இருக்கிறதோ, எங்கெல்லாம் அடக்குமுறை அரசுகள், மக்கள் விரோத அரசுகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை எதிர்த்த களத்திலே, மாற்றத்துக்கான போரிலே முன் நிற்பவர்களை, தம் உடன் நிற்பவர்களை “தோழர்” என்றழைப்பது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது..

உலகம் முழுவதுமுள்ள மார்க்சிய சிந்தனையாளர்கள் தங்களை ஒருவருக்கொருவர் ‘தோழர்’ என அவரவர் மொழியில் அழைப்பது வெறும் அலங்காரத்துக்காக அல்ல… மாற்றுச் சிந்தனை கொண்டவர், பொதுநல சிந்தனையாளர் என்பதன் அங்கீகாரம் அது.

அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனையாளர்களும் கூட தம் அரசியல் பயண சகாக்களை ‘தோழர்’ என்றழைப்பதன் காரணம், அவர்கள் மனிதநேய சிந்தனையாளர்கள், சமூக மாற்றத்துக்கான செயல்பாட்டாளர்கள் என்பதால்தான்.

“தோழர்” என்ற உறவுச் சொலைக் கேட்டதும் யாருக்கெல்லாம் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருக்கிறதோ, அவர்களெல்லாம் பெரும்பான்மை மக்களின் மீது தம் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் ஆளும் அதிகார கூட்டத்தவராகவோ, அல்லது அவர்களின் வால் பிடித்து வாழும் கழிசடை அரசியலுக்கு முட்டு கொடுப்பவராகவோ தான் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களுக்காக வாழ்ந்து மடிந்த மாவீரர்கள் உயர்த்திப் பிடித்த “தோழர்” எனும் உறவை முன் நிறுத்துவோம். உழைக்கும் மக்களிடம் எல்லையற்ற, எதிர்பார்ப்புகளற்ற அன்பை பகிர்வோம்.

Shared from SORNAKUMAR.R