‘சவுகார்பேட்டை’ விமர்சனம்

தலைவாசல் விஜய் – ரேகா தம்பதியருக்கு இரட்டை வாரிசுகள். இந்த வாரிசுகளில் அண்ணன் ஒரு ஸ்ரீகாந்த். தம்பி இன்னொரு ஸ்ரீகாந்த்.

இதில் தம்பி ஸ்ரீகாந்த்துக்கும், ராய் லட்சுமிக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே காதல். இந்த விஷயம் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு தெரிந்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.

இந்நிலையில், அண்ணன் ஸ்ரீகாந்த் தன் தம்பியின் காதலியான ராய் லட்சுமி மீது ஒருதலையாய் காமம் கொள்கிறார். அவர் எப்படியாவது ராய் லட்சுமியை அடைய வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இந்த விஷயம் வீட்டுக்கு தெரிய, அண்ணன் ஸ்ரீகாந்த்தை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, சவுகார்பேட்டையில் சேட்டாக இருக்கும் சுமன், அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பணம் வாங்கியவர்களின் சொத்துக்களை அபகரித்தும் வருகிறார். இவர் சினிமாவுக்கும் பைனாஸ் பண்ணி, இதே அக்கிரமத்தைச் செய்கிறார். (படத்தில் இந்த சினிமா பைனான்சியரின் பெயர் – ‘கோத்ரா’. ஏறக்குறைய இதே பெயர் சாயலில் நிஜத்திலும் ஒரு சினிமா பைனான்சியர் இருக்கிறார். வழக்கு மன்னனான அவரிடம் இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ ஆகியோர் வட்டிக்கு கடன் வாங்கி, ரொம்பவே சிக்கி சீரழிந்திருப்பார்கள் போலும்!)

சுமனிடம் கடன் வாங்கியவர்களின் பட்டியலில் ஒருவராக தலைவாசல் விஜய்யும் இருக்கிறார். பணம் கட்ட முடியாத தலைவாசல் விஜய், ரேகா, ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி ஆகிய அனைவரையும் சுமனும், அவரது மகன்களும் கொலை செய்து விடுகிறார்கள்.

இதில் கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த்தும், ராய் லட்சுமியும் பேயாக மாறுகிறார்கள். இவர்கள் தங்களை கொலை செய்த சினிமா பைனான்சியரான சுமன் வகையறாக்களை பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.

இறுதியில் ஸ்ரீகாந்த்தும் ராய் லட்சுமியும் சுமன் அண்ட் கோ-வை பழி வாங்கினார்களா? ராய் லட்சுமியை அடைய நினைத்த அண்ணன் ஸ்ரீகாந்த் என்ன ஆனார்? என்பது படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஸ்ரீகாந்த் அண்ணன், தம்பி என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அழகான ஸ்ரீகாந்த், அகோரமான ஸ்ரீகாந்த் என முற்றிலும் வேறுபட்ட இரண்டு வேடங்களில் வருகிறார். முந்தைய படங்களை விட இப்படத்தில் கூடுதல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய அழகால் முதலில் கவர்ச்சியாகவும், பின்னர் அகோரமான பேயாகவும் வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ராய் லட்சுமி.

சேட்டு சுமனின் அல்லக்கைகளாக வரும் சரவணன், சிங்கம் புலி, பவர் ஸ்டார் ஆகியோர் காமெடி என்கிற பெயரில் படம் முழுதும் பேய்களைக் காட்டிலும் அதிகமாக நம்மை டார்ச்சர் பண்ணுகிறார்கள். இவர்களிடமிருந்து தப்பிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.

ஜான் பீட்டர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியையும் பயமுறுத்துமளவிற்கு கொடுத்திருக்கிறார். சீனிவாச ரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

’காஞ்சனா’ பேய் பிடித்ததிலிருந்து விடுபட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களை, தன் பங்குக்கு ஒரு பேய் படம் கொடுத்து ஆசீர்வதிக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் வி.சி.வடிவுடையான். ஆனால், ரசிகர்களுக்கு பேய் பயத்துக்கு பதிலாக தலைவலியைத்தான் கொடுத்திருக்கிறார். இது சவுகார்பேட்டையா … கண்ணம்மா பேட்டையா…. என்று கதிகலங்க வைக்கிறது படம்.

‘சவுகார்பேட்டை’ – தலைவலியின் இன்னொரு பெயர்!