‘போக்கிரி ராஜா’ விமர்சனம்

“இதெல்லாம் சின்னப் பிரச்சனைகள்” என்று எவற்றையெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோமோ, அவை மிகப் பெரிய பிரச்சனைகளாக விஸ்வரூபம் எடுத்தால் என்ன ஆகும் என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம் தான் ‘போக்கிரி ராஜா’. அடிக்கடி கொட்டாவி விடுவது, பொது இடத்தில் ஆண்கள் சிறுநீர் கழிப்பது ஆகிய 2 சாதாரண பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த நகைச்சுவை கதை பின்னப்பட்டிருக்கிறது.

கொட்டாவி தான் பிரச்சனை நாயகன் ஜீவாவுக்கு. “எப்பப் பாத்தாலும் கொட்டாவி விட்டுட்டிருக்கான்” என்று ஆஃபீஸிலிருந்து தூக்கி எறியப்பட, சேரும் இன்னொரு ஆஃபீஸிலும் அதே கதை. டாக்டரைப் போய் பார்த்தால், அவர் பெரிதாக ஒன்றுமில்லை என்று கூறிவிடுகிறார்.

நாயகி ஹன்சிகாவுக்கு ஆண்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது பிரச்சனை. எந்த ஆணாவது சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பதைப் பார்த்தால், பெரிய தண்ணீர் லாரியை எடுத்துக்கொண்டு வந்து, அந்த ஆண் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து, ஓடஓட விரட்டுகிறார்.

ஊரையே கலக்கும் வில்லன் ‘கூலிங்க்ளாஸ் குணா’ என்ற சிபிராஜ், பொது இடத்தில் சிறுநீர் கழிக்க, ஹன்சிகா மீது காதல் மயக்கம் கொண்ட ஜீவா, சிபிராஜ் யாரென்று தெரியாமலேயே பொது இடத்தில் வைத்து அவரை அவமானப்படுத்தி விடுகிறார். இதனால் ஆத்திரமடையும் சிபிராஜ், ஜீவாவை பழிதீர்க்க வெறியுடன் அலைகிறார்.

இதற்குள், கொட்டாவி விடுகிற ஜீவாவுக்கு வேறொரு ஸ்பெஷல் பவர் வந்துவிடுகிறது. அதாவது ஜீவா கண்ணை, மூக்கைச் சுருக்கி, வாய் கோணி வாயைத் திறந்தால், வாயிலிருந்து வெளிப்படும் சூறாவளியை மிஞ்சிய காற்று சக்தி காரணமாக, எதிரிலிருக்கும் நபர் பத்தடிக்கு பறந்து போய் விழுகிறார். சிபிராஜ் அரிவாளோடு வெட்ட வர, வாயைத் திறக்கிற ஜீவாவால் அவர் கூலிங்க்ளாஸ் உடைந்து கண்ணில் குத்தி, அவர் விழுந்துவிட, அப்போதுதான் ‘நமக்கு இப்படி ஒரு சக்தியா’ என்று ஜீவாவுக்கே தெரியவருகிறது.

அதன்பிறகு சிபிராஜ் ஜீவாவைப் பழிவாங்கினாரா? அல்லது அவரிடமிருந்து ஜீவா தப்பித்தாரா? என்பது மீதிக்கதை.

இந்த படத்தில் ஜீவா மிகவும் இளமைத் துள்ளலுடன் நடித்திருக்கிறார். அவருக்கு இது முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அவருடைய முகபாவனைகள் ரசிக்கும்படி இருக்கிறது. காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது ஜீவாவுக்கு கைவந்த கலை. அதை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக, அவர் முகத்தைச் சுருக்கி, மூக்கை, காதை அசைத்து, பயங்கரமாக கொட்டாவிவிட்டு, எதிராளியைப் பறக்க விடும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.

ஹன்சிகாவுக்கு சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட ஐ.டி. ஊழியர் வேடம். இப்படத்தில் வரும் “பப்ளி பப்ளி…” என்ற பாடலுக்கு ஏற்ற மாதிரி  படம் முழுக்க  பப்ளியாக வந்துபோகிறார் ஹன்சிகா. இவருடைய நடிப்பு ஓகே ரகம்.

காமெடி கலந்த வில்லன் வேடம் என்றால், அது சத்யராஜூக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி. அபாரமாக நடித்து அசத்திவிடுவார். அப்படிப்பட்ட ‘கூலிங்க்ளாஸ் குணா’ என்ற காமெடி வில்லன் கதாபாத்திரம் தான் சிபிராஜூக்கு. அப்பாவின் மாடுலேஷனில் வசனம் பேசி அசால்டாக தன் கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்துகிறார் சிபிராஜ். ஜீவா விட்ட கொட்டாவியால் பார்வையை இழந்து அவர் படும்பாடு சிரிக்க வைக்கிறது.

ஜீவாவின் நண்பராக வரும் யோகி பாபு கலகலப்பூட்டி இருக்கிறார். மனோபாலா, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, ராம்தாஸ் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

டி.இமானின் இசையில் பாடல்கள் அருமை. “அத்துவிட்டா…”, “பப்ளி…” பாடல்கள் சிறப்பு. சிபிராஜ் வரும் காட்சிகளில் பின்னணி இசை குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கிறது.

ஆஞ்சநேயனின் ஒளிப்பதிவு வண்ணத்தை வாரி இறைத்திருக்கிறது.

கொட்டாவியையும், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதையும் வைத்து வித்தியாசமாக கதை பண்ணியிருக்கிறார் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா. ஆனால் வித்தியாசமான கதைக்கு வித்தியாசமான திரைக்கதை அமைத்தால் தானே சுவாரஸ்யம். ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் அழுத்தமான திரைக்கதையால் கவர்ந்திருந்த ராம் ப்ரகாஷ் ராயப்பா, இதில் கோட்டை விட்டுவிட்டார் என்பது ஏமாற்றம்.

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் குசுவை வைத்து காமெடி பண்ணி, அருவருப்பைத் தருவார்களோ?

ஸ்பெஷல் பவர், பீரியட் கதை, கெத்து காட்டப் போகும் வில்லன், சிரிக்க வைக்க சில காட்சிகள் என்று எதை என்ன செய்யலாம் என்று தெரியாமல் குட்டையைக் குழப்பி, என்னென்னவோ முயன்றிருக்கிறார் இயக்குனர்.

“இல்லைங்க.. நான் எதுக்கு வேணும்னாலும் சிரிப்பேன்” என்பீர்களானால் ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படத்துக்கு போய் வரலாம்.

‘போக்கிரி ராஜா’ – சிரித்தே தீருவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு மட்டும்!