ஷாட் பூட் த்ரி – விமர்சனம்

நடிப்பு: சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, பிரணிதி, பூவையார், கைலாஷ் ஹீட், வேதாந்த் வசந்த், அருணாசலம் வைத்தியநாதன், சாய் தீனா, சிவாங்கி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: அருணாசலம் வைத்தியநாதன்

ஒளிப்பதிவு: சுதர்சன் ஸ்ரீனிவாசன்

படத்தொகுப்பு: பரத் விக்ரமன்

இசை: ராஜேஷ் வைத்யா

தயாரிப்பு: ’யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ்’ அருணாசலம் வைத்தியநாதன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்துக் குழந்தைகளின் முக்கியமான பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் ‘ஷாட் பூட் த்ரி’. பல நாடுகளில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாக்களில் ’சிறந்த குழந்தைகள் திரைப்படம்’ என இது திரையிடப்பட்டுள்ளது.

கைலாஷ் (கைலாஷ் ஹீட்), பல்லு (வேதாந்த் வசந்த்) ஆகிய இரண்டு சிறுவர்களும், பல்லவி (பிரணிதி) என்ற சிறுமியும் பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். பல்லு குறைவான மதிப்பெண் எடுத்துவிட்டான் என்பதற்காக கைலாஷும், பல்லவியும் தங்கள் மதிப்பெண்ணை பகிர்ந்து கொடுத்து அவனை காப்பாற்ற நினைக்கும் அளவுக்கு மூவரும் நெருங்கிய நண்பர்கள்.

இவர்களில், கைலாஷின் பெற்றோர்களான சுவாமிநாதனும் (வெங்கட் பிரபு), சியாமளாவும் (சினேகா) தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனத்தில் பணி புரிவதால், முடுக்கிவிட்ட எந்திரம் போல எந்நேரமும் பிஸியாக இருக்கிறார்கள். இதனால் கைலாஷ், அன்பாகப் பேசி விளையாடவும், கொஞ்சி அரவணைக்கவும் ஆள் இல்லாமல் வீட்டில் தனிமையில் வெறுமையை உணருகிறான். ஒரு கட்டத்தில் அவன் “எனக்கு விளையாட ஒரு தம்பிப்பாப்பா வேணும்” என்று தன் பெற்றோர்களிடம் கோரிக்கை வைக்கிறான். அக்கோரிக்கையை நிறைவேற்ற சுவாமிநாதனுக்கு ஆசை இருந்தபோதிலும், சியாமளா தன் வேலையையும், பதவியையும் காரணம் காட்டி மறுத்துவிடுகிறார். ”சரி, தம்பிப்பாப்பா தான் வேணாம், துணைக்கு ஒரு நாய்க்குட்டியாவது வளர்க்கிறேனே” என்று கைலாஷ் கெஞ்ச, அதற்கும் அனுமதி கொடுக்க மறுக்கிறார் சியாமளா.

ஆனால், கைலாஷின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் அவனது நண்பர்களான பல்லுவும், பல்லவியும், அவனது பிறந்தநாளுக்கு ’கோல்டன் ரெட்ரீவர்’ வகை நாய்க்குட்டி ஒன்றை பரிசளிக்கிறார்கள். அதற்கு ஆசை ஆசையாய் ‘மேக்ஸ்’ என்று பெயர் வைக்கிறார்கள். வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது என சியாமளா ஆட்சேபித்தபோதிலும், சுவாமிநாதனின் பெருமுயற்சியால், கைலாஷின் வீட்டில் குடியேறுகிறது மேக்ஸ்.

கைலாஷ் குடும்பம் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் எல்லோரது எடுபிடி வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து கொடுக்கும் சிறுவன் ரமணா (பூவையார்). பள்ளியில் படிக்க வசதி இல்லாத அவன், மேக்ஸை பாதுகாத்து வருகிறான்.

இந்த நிலையில், சுவாமிநாதனும், சியாமளாவும் வெளியூர் சென்றுவிட, பல்லவியும், பல்லுவும் கைலாஷ் வீட்டுக்கு வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து மேக்ஸ், திறந்துகிடந்த வாசல் கதவு வழியே வெளியேறி, தெருவுக்குச் சென்று, காணாமல் போய் விடுகிறது.

மேக்ஸ் காணாமல் போய்விட்டதை அறிந்து பதறும் கைலாஷ், தன் நண்பர்களான பல்லு, பல்லவி, ரமணா ஆகியோரோடு சேர்ந்து தெருத் தெருவாக, சாலை சாலையாக மேக்ஸைத் தேடி அலைகிறான்.

இதற்கிடையே, தெருநாய்களைப் பிடித்து கொன்று புதைக்கும் திட்டத்துடன் நாய்வண்டியில் புறப்படுகிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.

தெருவில் திக்குத் தெரியாமல் அலையும் மேக்ஸை கைலாஷும், அவனது நண்பர்களும் கண்டுபிடித்தார்களா? அல்லது அது மாநகராட்சி ஊழியர்களின் கையில் சிக்கியதா? என்பது ‘ஷாட் பூட் த்ரி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

சிறுவர்களை முதன்மை கதாபாத்திரங்களாகக் கொண்ட இப்படத்தில் உயர் நடுத்தர வர்க்கத்துச் சிறுவன் கைலாஷாக கைலாஷ் ஹீட்டும், பல்லுவாக வேதாந்த் வசந்த்தும், பல்லவியாக பிரணிதியும், ஏழைவீட்டுச் சிறுவன் ரமணாவாக பூவையாரும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கதையைப் புரிந்துகொண்டு, தத்தமது கதாபாத்திரத்தை உள்வாங்கி, இயக்குனர் சொல்லித் தந்தபடி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கைலாஷின் அப்பா சுவாமிநாதனாக வெங்கட் பிரபுவும், அம்மா சியாமளாவாக சினேகாவும் பொருத்தமான நடுத்தர வயது தம்பதியராக, எந்நேரமும் வேலை வேலை என பறந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட் ஊழியர்களாக, யதார்த்தமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

இவர்களுடன் யோகி பாபு, அருணாசலம் வைத்தியநாதன், சிவாங்கி, சாய் தீனா உள்ளிட்டோர் தங்கள் பங்கை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

நகரங்களில், ’நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்ற குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையை கடைப்பிடிக்கும் உயர் நடுத்தர வர்க்கத்து ‘நியூக்ளியர்’ குடும்பங்களில், பெரிய சம்பளத்துக்காக அப்பாவும், அம்மாவும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அன்பு செலுத்தவும், அரவணைக்கவும் ஆளின்றியும், அதை வாய்விட்டு சொல்லத் தெரியாமலும் தனிமையில் தவிக்கிறது. முக்கியமான இந்த பிரச்சனையை படத்தில் முன்னிலைப்படுத்தியதற்காக இயக்குனர் அருணாசலம் வைத்தியநாதனை பாராட்டலாம். மேலும், நாய் உள்ளிட்ட அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற நல்ல கருத்தையும் இயக்குனர் வலியுறுத்தியிருக்கிறார்.

ராஜேஷ் வைத்யா இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசை சுமார் ரகம்.

சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு கதையின் தேவைக்கேற்ப பயணித்திருக்கிறது.

‘ஷாட் பூட் த்ரி’ – குழ ந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் பார்க்க வேண்டிய படம்!