மன்னார்குடி மாஃபியாவின் கொடூர குரல் இன்று வெளிப்பட்ட தருணம்!

அடிக்கடி கண் கலங்குபவராகவும், மெல்ல நடப்பவராகவும், சற்று அச்சம் கலந்த குரலில் பேசுபவராகவும் வெளியில் பாவலா காட்டி வந்த மன்னார்குடி மாஃபியா சசிகலாவின் சுயரூபம் இன்று வெளிப்பட்டுவிட்டது. ஆட்சி அமைக்க ஆளுநர் தன்னை அழைக்காமல் காலம் கடத்துவதால் ஆத்திரம் அடைந்திருக்கும் சசிகலா, வன்முறை வெறியாட்டத்துக்கு தயாராகிவிட்டார் என்பது இன்று அவரது கொடூரக் குரலில் வெளிப்பட்டது…

“ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருந்தோம். ஓரளவுக்கு தான் பொறுமையை கையாள முடியும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்” என்று சசிகலா கூறியபோது, ஒரு தாதாவுக்கு உரிய அவரது இறுக்கமான முகபாவமும், கட்டுப்படுத்தப்பட்ட கோபத்துடன் நிறுத்தி நிதானமாக வெளிப்படுத்திய கொடூரக்குரலும், ‘காட்பாதர்’ படத்தில் வரும் டான் கார்லியோன் எனும் தாதா கதாபாத்திரத்தை சட்டென கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது.

போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலா இன்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது:

அம்மா சொன்னது போல் நம்து இயக்கம் ஒரு எக்கு கோட்டை. தொண்டர்கள் இருக்கும் வரை எதற்கும் அஞ்சப் போவதில்லை. நம்மை பிரித்தாள நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள். ஓரளவு தான் பொறுமை காப்போம். அதற்கு மேல் செய்ய வேண்டியதை செய்வோம்.

கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உள்ளது. பல சோதனைகளைத் தாண்டி கட்சியை கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. அ.தி.மு.க பிளவுபடக் கூடாது. ஜெயலலிதாவுக்கு வந்த சோதனை போல் தற்போது நமக்கு சோதனை வந்துள்ளது. தொண்டர்கள் என்னுடன் இருக்கும் வரை நான் யாருக்கும் எதற்கும் அஞ்சப்போவது இல்லை.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருந்தோம். ஓரளவுக்கு தான் பொறுமையை கையாள முடியும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம். ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களை அம்மா என்னிடம் விட்டுச் சென்று இருக்கிறார். அவர்கள் எனக்கு துணை இருக்கும்போது ஒரு சிலரின் ஆட்டங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அம்மாவின் ஆட்சியையும் கட்சியையும் கட்டிக் காப்பேன்.

இவ்வாறு சசிகலா கூறினார்.

இதனை அடுத்து கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூருக்குச் சென்ற சசிகலா, அங்கு சொகுசு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பார்த்து பேசிவிட்டு போயஸ் தோட்டம் திரும்பினார். அப்போது காருக்குள் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் கடத்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையாக கருதுகிறேன். இதுவரை பொறுமையாக இருந்தோம். நாளை வேறு விதமாக போராடுவோம்” என்றார்.

“இதுவரை பொறுமையாக இருந்தோம். நாளை வேறு விதமாக போராடுவோம்” என்று அவர் கூறியபோதும் கூட மிரட்டல் தொனி தான் வெளிப்பட்டது.

இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்து மிரட்டல் தொனியில் சசிகலா பேசியிருப்பதன் மூலம், அவரது தரப்பு வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபடும் திட்டத்துடன் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள விடுதிகளிலும், திருமண மண்டபங்களிலும் ஆயிரக்கணக்கான அடியாட்களை சசிகலா தரப்பு தங்க வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சந்தேகத்துக்கு உரிய விடுதிகளையும், திருமண மண்டபங்களையும் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்.