சாமானிய மக்களை துன்புறுத்தும் மோடியின் நடவடிக்கைக்கு இந்திய பெருமுதலாளிகள் வரவேற்பு!

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நரேந்திர மோடி அரசு திரும்ப பெற்றதை, கருப்புப் பணம் எனும் நச்சுக்கொசுவை உற்பத்தி செய்யும் சாக்கடைகளான இந்திய பெருமுதலாளிகள் அங்கம் வகிக்கும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) (சிஐஐ) வரவேற்றுள்ளது. “இந்த அதிரடி முடிவானது கறுப்புப் பண பொருளாதாரத்திற்கு மாபெரும் இடியாக அமையும்” என்று சிஐஐ இயக்குனர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்திய பெருமுதலாளிகளுக்கான அமைப்பு வரவேற்றிருப்பதிலிருந்து, இது அவர்களுக்கு வளம் சேர்ப்பதற்கும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்களை வதைப்பதற்குமான நடவடிக்கை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

“பணம் திடீரென திரும்பப் பெறப்பட்டதால் சில அசவுகரியங்கள் ஏற்படலாம். ஆனால் இந்த நடவடிக்கையால் நமது பொருளாதாரம் மிகவும் வலிமை மிக்கதாக மாறும். நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 450 பில்லியன் அமெரிக்க டாலர்களாக, கிட்டத்தட்ட மொத்தப் பொருளாதரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கறுப்புப் பணம் ரூபாய் நோட்டுகளாகவும், நகைகளாகவும், மனைகள் மற்றும் கட்டிடங்களாகவும் இருக்கிறது. இவை ஒழிக்கப்பட்டால் நல்ல பொருளாதார மாற்றங்கள் கூடிய விரைவில் உருவாகும்” என்று சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கறுப்புப் பணம் ஒழிப்பு மட்டுமல்லாமல், அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் ஆதிக்கமும் குறைய வாய்ப்புள்ளது. அச்சடிக்கப்பட்ட பணத் தாள்களின் பயன்பாடு அதிகமாக இருந்தால் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். மற்ற வளரும் நாடுகளில் அச்சடிக்கப்பட்ட பணத் தாள்களின் பயன்பாடு, அந்நாடுகளின் மொத்த உற்பத்தி மதிப்பில் 4-5%சதவீதம் தான் உள்ளது.ஆனால் நம் நாட்டில் இது 12%சதவீதம் என்ற அளவில் அதிகமாக உள்ளது.

“உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற அரசின் முடிவு லஞ்சப் பணம், கறுப்புப் பணம் ஆகியவற்றை ஒழிப்பதோடு, பணமில்லா வர்த்தகம் இந்தியாவில் வேகமாக வளர்வதற்கும் வழி வகை செய்யும். நாட்டில் பணவீக்கமும், கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும்” என்று சிஐஐ பாராட்டியுள்ளது. “இந்த நல்ல விளைவுகள் ஏற்பட சிறிது காலம் ஆகும். அதுவரை ஏற்படும் வலிகளை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் அது கருத்து தெரிவித்துள்ளது.

“மேலும் மத்திய அரசின் முடிவால், மக்கள் வங்கிகளின் வைப்பு கணக்குகளில் பணத்தை முதலீடு செய்வார்கள். வங்கிகள் வழங்கும் வைப்பு அட்டைகளை பயன்படுத்தத் தொடங்குவார்கள்.

“இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.14.2 லட்சம் கோடியாகும். இது புழக்கத்தில் இருந்த பண மதிப்பில் கிட்டத்தட்ட 85% ஆகும். கணக்கு காட்ட வேண்டும் என்ற பயத்தின் காரணமாக இவற்றில் கணிசமான அளவு – குறைந்த பட்சம் 20% – பணம் வங்கிகளுக்கு வராது. ஆனாலும், பெரும் பகுதி பணம் வங்கிகளின் நடப்பு அல்லது வைப்பு நிதிக் கணக்கில் வந்தால், வங்கிகள் நிதி நிலை பல மடங்கு அதிகரிக்கும். கணக்குக்கு வராத பணத்திற்கு மாற்றாக புதிய பணத்தை மத்திய ரிசர்வ் வங்கி உருவாக்கலாம் அல்லது அந்த லாபத்தை அரசிற்கு அளிக்கலாம்.

“பணவீக்க விகிதம் கட்டுக்குள் உள்ள நிலையில், தற்போதைய நிலையால் வட்டி விகிதத்தை குறைக்கும் அறிவிப்பை ரிசர்வ் வங்கி எடுக்கக் கூடும்” என்று பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதார சீர்திருத்தத்துக்கு மோடி எடுத்துள்ள மிகச் சிறந்த நடவடிக்கையை செயல்படுத்த அவருக்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.