ரூ.500, ரூ.1000 விவகாரம்: “நல்ல முடிவு தான்; சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்!” – விஜய்

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி திடீரென அறிவித்தது குறித்து, 7 நாட்களுக்குப்பின் நடிகர் விஜய் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து:-

மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு உண்மையிலேயே நல்ல விஷயம்தான். நல்ல முடிவுதான். உண்மையிலேயே நம்ம நாட்டுக்குத் தேவையான, துணிச்சலான, வரவேற்கக்கூடிய ஒரு முயற்சிதான். கண்டிப்பா இது நம்ம நாட்டோட பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு நோக்கம் பெரிசா இருக்கும்போது, அதற்கான பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனா என்னன்னா, அந்த பாதிப்புகள், நோக்கத்தைவிட அதிகமா ஆகிவிடக்கூடாதுங்கறதை நாம பாத்துக்கணும்னு நெனைக்கறேன். சில விஷயங்கள் தவிர்த்திருக்கலாம்னு ஒரு சின்ன ஃபீல் எனக்கு இருக்கு. ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் சாப்பிட முடியாம, மருந்து மாத்திரை வாங்க முடியாம சிரமப்படறதா சொல்றாங்க. அதைத் தவிர்த்திருக்கலாம்னு தோணுது. நாலைஞ்சு நாட்களா இருந்த அந்த பதற்ற நிலை இப்ப குறையுதுன்னும் சொல்றாங்க. சின்னச் சின்ன தொழில் பண்ற வியாபாரிகள், தியேட்டர்கள், மார்க்கெட் இந்த மாதிரி இவங்கள்லாம் தேவையில்லாம பாதிக்கப்படறாங்களோன்னு ஒரு சின்ன ஃபீல்தான்.

அது மட்டும் இல்ல. நான் நியூஸ்ல நிறைய விஷயம் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. என்னன்னா, ஒரு பாட்டி பேத்தியோட கல்யாணத்துக்காக தன் நிலத்தை வித்து அந்தப் பணத்தைக் கொண்டு  வர்றாங்க. பணம் செல்லாதுன்னு கேள்விப்பட்ட உடனே, தற்கொலை செய்யற அளவுக்குப் போறாங்க. இன்னொரு சம்பவத்துல, ஒரு பிறந்த குழந்தைக்கு ஏதோ பிரச்னை. அங்கயும் பணம் வாங்காததால, டிரீட் பண்ண முடியாம அந்தக் குழந்தை இறந்து போயிடுது. இந்த மாதிரி சில விஷயங்களை தவிர்த்திருக்கலாமோன்னு தோணுது.

நாட்டுல ஒரு 20% பணக்காரங்க இருப்பாங்களா? அதுல ஒரு க்ரூப் பண்ற தவறுக்காக பாக்கி 80% எளிய மக்கள் என்ன பண்ணினாங்கன்னு கேட்கத் தோணுது. நான் திரும்பத் திரும்ப சொல்றேன். இதுவரைக்கும் யாரும் பண்ணாத, யாரும் பண்ண யோசிக்காத, சிறப்பான பெரிய முயற்சிதான் இது. அதுல எந்த மாற்றமும் இல்லை.. எந்த தவறும் இல்லை. ஆனா இப்டி ஒரு பிரச்னைக்கு தீர்வு காணும்போது, அமல்படுத்தும்போது, என்னென்ன பிரச்னைகள் வரும்னு முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு அதுக்கான முன்முயற்சிகளை எடுத்துப் பண்ணிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்குமோ அப்டிங்கறதுதான் என்னுடைய மிகத் தாழ்மையான கருத்து.

ஆனா இன்னைக்கு கொஞ்சம் நிலைமை சீராகுதுன்னு சொல்றாங்க. சில தினங்களுக்கு முன் இருந்த சிரமம் குறையுதுன்னு சொல்றாங்க. ஆனாலும் இன்னும் கிராமங்கள்ல சில சிரமங்கள் இருக்கு. சீனியர் சிட்டிசன்ஸுக்கு சின்ன முக்கியத்துவம் குடுத்து அவங்களுக்கு இருக்கற கஷ்டங்களை சீக்கிரமாவே மத்திய அரசு தீர்த்தா நல்லாருக்கும்’

இவ்வாறு விஜய் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.