‘தர்மதுரை’ 100வது நாள் கேடயம்: ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்!

பல ஆண்டுகளுக்குமுன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘தர்மதுரை’. இதே தலைப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தர்மதுரை’யும் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்த ‘தர்மதுரை’ வெற்றி பெற்றதை அடுத்து, அப்படத்தின் 100வது நாள் கேடயத்தை, ரஜினிகாந்த் மனமகிழ்ந்து, ‘தர்மதுரை’ படக்குழுவினரை வாழ்த்தி பெற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி 20 நிமிடங்கள் நீடித்தது. ‘தர்மதுரை’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஆகியோரை பாராட்டியதோடு, படத்தின் அம்சங்களை குறிப்பிட்டு பாராட்டினார் ரஜினிகாந்த்.

விஜய் சேதுபதி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சீனு ராமசாமி இயக்கும் படங்களில் அவர் கவனித்துவரும் சமூக அக்கறையுள்ள தன்மைகளை விவரித்து பாராட்டினார்.

வில்லனாக நடிக்கும்போது முழுமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் ‘தாரை தப்பட்டை’, ‘மருது’ போன்ற படங்களில் சிறப்பாக நடித்து முன்னேறி வருவதாக நடிகர் – தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷை பாராட்டினார் ரஜினிகாந்த்.

ரஜினியுடனான இந்த சந்திப்பு பற்றி இயக்குனர் சீனு ராமசாமி கூறுகையில், “முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினி சார் ஏற்றிருந்த காளி கதாபாத்திரம் தந்த பாதிப்பில் சினிமாவில் நுழைந்த எனக்கு, ரஜினி சாரை சந்தித்ததும், அவரின் பாராட்டும், அளித்த தெம்பும்… இந்த நாள் தந்த மிக சிறந்த பரிசாக நான் பார்க்கிறேன்” என்றார்.

உண்மையான ‘தர்மதுரை’க்கு தங்கள் ‘தர்மதுரை’யின் 100வது நாள் கேடயத்தை வழங்கியதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் படக்குழுவினர்.

0a1d