“சல்லிக்கட்டு போராட்டத்தில் விஷ விதைகள்”: ஹிப்ஹாப் ஆதி திடீர் குற்றச்சாட்டு!

சல்லிக்கட்டு வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது தனித்தமிழ்நாடு, இந்திய எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, பெப்சி – கோக் எதிர்ப்பு என்று திசைமாறி செல்வதாக திடீரென குற்றம் சாட்டியுள்ள இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இப்போராட்டத்திலிரு ந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

நேற்று முழுவதும் மெரினா போராட்டக் களத்தில் இருந்தேன். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி விட்டேன். என்ன பிரச்னை என்று பலரும் கேட்டார்கள். பயந்து விட்டீர்களா என்றும் கேட்டார்கள். நான் பயப்படவில்லை. மனம் வருந்தி தான் அங்கிருந்து கிளம்பினேன்.

ராஜசேகர் ஐயாவும், சேனாதிபதியும் தான் இந்தப் போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து போராடுகிறார்கள் என்று நான் கூற ஆரம்பித்தேன்.

தொடர் போராட்டங்களில் முதல் இரண்டு நாட்கள் நான் அலங்காநல்லூர், சென்னை, கோவையிலெல்லாம் இருந்தேன். ஏனென்றால் இது அறப்போராட்டங்களாக நடந்தது.

ஆனால் கோவையில் நடந்த சில சம்பவங்கள் என்னை மனம் வருந்தச் செய்தது. அங்கே சிலர் திடீரென வந்து எங்க பகுதியில் வந்து பேசுங்க என்றார்கள். என்ன என்று பார்த்தால் அங்கே தேசியக் கொடியை கீழே போட்டு அவமதித்து, இந்தியா என்று கேவலப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தேசிய விரோத செயலுக்கு நான் ஒருபோதும் துணை போக மாட்டேன். அதை அவர்களிடம் தெளிவா சொல்லி விட்டேன்.

உடனே, “ஹிப்ஹாப் தமிழா, நீ உண்மையான தமிழனா இருந்தா இங்கே வந்து போராடு”ன்னு சொல்றாங்க. இன்னொருத்தர், “மத்திய அரசு ஹிந்துக்களுக்கே முன்னுரிமை தருகிறது. இஸ்லாமியர்களுக்கு தரவில்லை” என்றெல்லாம் பேசுகிறார்கள். இதெல்லாம் எனக்கு ஒப்புமை இல்லை.

கடந்த ஒரு வருடமாக நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை பீட்டாவுடன் இணைத்து கெட்ட வார்த்தைகளைக் கொண்டு எழுத ஆரம்பித்தார்கள். குடும்பப் பெண்கள் உள்ள இடத்தில் திடீரென சில கும்பல்கள் வந்து மோடி, தனித்தமிழ்நாடு என்றெல்லாம் பேசி கூடவே தகாத வார்த்தைகளைப் பேசினார்கள்.

மனம் வருந்தி நான் அங்கிருந்து கிளம்பி மதுரைக்கு வந்து விட்டேன். அதன் பிறகு பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் இதே போல நடந்து கொண்டிருக்கிறது.

“பெப்ஸி, கோக் தடை செய்யவில்லையென்றால் நான் செத்து விடுவேன்” என்கிறான். நீ ஏன் வாங்குற?

எதற்காக போராடுகிறோம் என்று தெரியாமல் திசை திரும்பி விட்டது.

இந்த கூட்டம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை.

10 வருட காலமாக கஷ்டப்பட்டு கொண்டு வந்த விஷயத்தை மாணவர்கள் ஒழுங்காக செய்து கொண்டிருந்தார்கள். இதில் திடீரென குட்டியானையில் ஒரு ஆள் ‘தேசியக் கொடியை எரிக்கப் போறேன்” என்று வருகிறார்.

ஜல்லிக்கட்டுக்கு போராடும் ஆட்கள் வ.உ.சி. பூங்காவில் உள்ளே உட்காந்திருக்கிறார்கள். ஆனால் தேசவிரோத சக்திகள் வெளியில் வேறு விதமாக கூச்சல் செய்து கொண்டிருந்தார்கள்.

நான் மிகவும் புண்பட்டு விட்டேன்.

ஜல்லிக்கட்டை நோக்கி தான் இந்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதனால் தான் நான் பங்கு பெற்றேன். தமிழர் பிரச்னைக்காக நானும் போராடத் தயார்.

ஆனால் மாணவர்களின் பெற்றோர்கள் அதற்காகத்தான் அனுப்பி வைத்தார்கள்.

“மோடியை அழிக்கணும். ஹிந்துத்வா” என்றெல்லாம் பிட் நோட்டீஸ் எல்லாம் போட்டுத் தருகிறார்கள்.

நல்ல விதையை விதைத்த இடத்தில் விஷ விதைகள் விளைவது எனக்கு உடன்பாடில்லை.

இதுவரைக்கும் நன்றாக போய் கொண்டிருக்கிறது. இனிமேல் வேண்டாம் என்று கிளம்பி விட்டேன்.

அந்த அமைப்புகள் தேவை என்றால் தனியாகச் சென்று செய்து கொள்ளலாம்.

யாரையும் திட்டக் கூடாது. ஆனால் இந்தப் போராட்டம் வேறு விதமாக சென்று கொண்டிருக்கிறது என்பதால் நேற்றிலிருந்து நான் போராட்டத்தில் இருந்து வெளியேறி விட்டேன்.

உள்ளுக்குள்ளே ஏதேதோ பாலிடிக்ஸ் நடக்கிறது. தேவை இல்லாமல் திசை திருப்பி இன்னும் விஷ விதைகளை விதைக்கிறார்கள். போராட்டத்திற்கு வேறு கலர் அடித்து சென்று கொண்டிருப்பது எனக்கு ஒப்புதல் இல்லை.

என்னதான் இருந்தாலும் காவல்துறை, அரசு உதவி இல்லாமல் போராட்டம் நடத்த முடியுமா?

நான் உண்மையில் ஒரு தமிழனாக் சொல்றேன். என்ன பிரச்னை என்பதை மறந்துவிட்டு தீவிரவாதம், மதவாதமாக ஆகிவிட்டது. அவனைக் கொல்லணும், இவனைக் கொல்லணும் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

இதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

நல்லது நடக்க வேண்டும் என்று நானும் வேண்டிக்கொள்கிறேன்.

நேற்று ஒருத்தன் வாட்ஸப்பிலே “என்னை போலீஸ் கூப்பிட்டு தனியா உட்கார வெச்சு விசாரணை செய்யுறாங்க”ன்னு வதந்தி கிளப்புறான். இந்த பிரச்னைக்குள் வேறு பிரச்னையை கொண்டு வராதீர்கள்.

நீங்க என்னைத் தப்பா நினைச்சு என்னைத் திட்டுவதாக இருந்தால் திட்டலாம்.

முதல் 3 நாட்கள் மக்கள் தெளிவாக இருந்தார்கள். இப்போது என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது.

அரசியலுக்கு வரும் அளவிற்கெல்லாம் எனக்கு அறிவு பத்தாது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். இது ஜனநாயக வழிமுறை. பாரதியாரும் இதையே செய்திருக்கிறார்.

எனவே எனக்கு அரசியல் சாயம் பூசாதீர்கள். நான் எமோஷனலாக பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

உண்மையான தீர்வு வேண்டுமென்றால் பத்து வருடமாக இந்தப் பிரச்னையை எதிர்கொண்டு வரும் ராஜசேகர் ஐயா, சேனாதிபதி ஆகியோர் சொல்வதைக் கேளுங்கள்.

அன்பான வேண்டுகோள். நன்றி.

இவ்வாறு ஹிப்ஹாப் ஆதி கூறியுள்ளார்.