நாஞ்சில் சம்பத் திடீர் பல்டி: “ஜனநாயகத்தின் உச்சம் சசிகலா” என புல்லரிப்பு!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றார். சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்ள விரும்பாத அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரும், தலைமைக் கழக பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், “வான்கோழி மயிலாகிவிட்டது” என்கிற ரீதியில் சசிகலாவை கடுமையாக விமர்சித்ததோடு, பொதுவாழ்க்கையிலிருந்து விலகப் போவதாகவும் அறிவித்தார்.

நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தபோது, அவருக்கு பதவி அளிக்கப்பட்டதுடன், கட்சி சார்பில் ‘டிஎன் 06 ஹெச் 9007’ என்ற எண் கொண்ட இன்னோவா கார் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த காரை, அண்மையில் அதிமுக அலுவலக வளாகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத். இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து விலகுவது உறுதி என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், எதிர்பாராத திருப்பமாக, நாஞ்சில் சம்பத் இன்று (சனிக்கிழமை) காலை சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொதுவாழ்வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறியிருந்தேன். ஆனால், எனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு என் மீது அக்கறை கொண்ட பலரும் வலியுறுத்தினார்கள். அவர்கள் வலியுறுத்தலின் பேரில் இன்று சசிகலாவை சந்தித்தேன்.

என்னைப் பார்த்ததும் “வாங்க.. வாங்க. உங்களைத்தான் எதிர்பார்த்தேன்” என்று வரவேற்றார். “காரை ஏன் திருப்பிக் கொடுத்தீர்கள்?” என கேட்டார். “காரை எடுத்துச் செல்லுங்கள் உற்சாகமாக, இயல்பாக சுதந்திரமாக கட்சிப் பணியாற்றுங்கள்” என்றார்.

ஜனநாயகக் கட்சியில் என்னைப் போன்றோரின் எதிர்பார்ப்பு இதுவே. அதிமுகவில் சுதந்திரமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்த பிறகு ஏற்பட்டிருக்கிறது. அவரை நான் கடுமையாக விமர்சித்திருந்தும்கூட என்னை ஏற்றுக்கொண்டார்கள் என்றால், அது ஜனநாயகத்தின் உச்சம்.

அடுத்த கட்டமாக, சசிகலா ஆணையின்படி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவேன். கட்சிப் பணி ஆற்றுவதற்கு பொறுப்புகள், பதவிகள் அவசியமில்லை. ‘தமிழ் பேசும் நாவலர்’ என்ற பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதனால், வேறு பதவிகள் பற்றி எனக்கு கவலையில்லை.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றுக் கொண்டுள்ளது எதிரிகளை நிலைகுலையச் செய்துள்ளது. கட்சியினரை அவர் சந்தித்து வருகிறார். அவரது தலைமையில் அதிமுக புதுப்பொலிவோடு எழுச்சி காணும். ஜெயலலிதாவின் இடத்தை சசிகலா நிச்சயம் நிரப்புவார்.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.