சட்டப் பேரவையில் குற்றவாளி ஜெயலலிதா படமா?: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை வைக்க முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் படத்தை திறந்துவைக்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேரில் அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஜூலை மாதத்தில் படத் திறப்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர் என்பதால் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை திறக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக திமுக, காங்கிரஸ், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கூறியதாவது:

துரைமுருகன் (திமுக முதன்மைச் செயலாளர்):

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறக்க அதிமுகவினரும், முதல்வர் கே.பழனிசாமியும் முயற்சி செய்வது எனக்கு வியப்பு அளிக்கவில்லை. என்னதான் தவறு செய்திருந்தாலும் அவர்களின் தலைவர் ஜெயலலிதா. எனவே, அவரது படத்தை திறக்க ஏற்பாடு செய்கின்றனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை திறக்க பிரதமரை அழைத்துள்ளனர். எனது கணிப்பு உண்மையாக இருந்தால் ஜெயலலிதா படத் திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரமாட்டார். அப்படி அவர் வந்தால் நீங்களுமா மோடி என அவருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ் முன்னாள் எம்.பி.):

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துப் பார்த்த யாரும் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் வைக்கப்படுவதை ஏற்க மாட்டார்கள். சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா தனது வீட்டில் தங்க வைத்ததே ஊழல் செய்வதற்குத்தான் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மரணம் அடைந்ததால்தான் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்கவில்லையே தவிர, மற்றபடி அவரும் குற்றவாளிதான். எனவே, சட்டப்பேரவையில் அவரது படம் வைக்கப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. படத்தை பிரதமர் திறந்துவைப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்):

முன்னாள் முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவையில் திறக்கலாம் என்றாலும் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். மக்களுக்காக போராடி அவர் சிறை செல்லவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர். முதலில் உயிருடன் இருக்கும்போதே தீர்ப்பு வந்தது. அதன்பிறகு மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பில் அவரும் குற்றவாளிதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தார்மீக ரீதியாக பார்க்கும்போது அவரது படத்தை சட்டப்பேரவையில் திறப்பது சரியல்ல. படத் திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைப்பதும் சரியான முன்னுதாரணம் அல்ல.

ஏ.ஆர்.இளங்கோவன் (தேமுதிக பொருளாளர்):

சட்டப்பேரவை என்பது தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும், பிரதிபலிக்கும் இடமாக இருக்கிறது. சட்டப்பேரவையில் ஒரு தலைவரின் படம் இருக்கிறது என்றால், அவரைப்போல மக்கள் வாழ வேண்டுமென சுட்டிக்காட்டும் அளவுக்கு இருக்க வேண்டும். ஊழல் செய்தவர்களோ, ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவரின் படமோ சட்டப்பேரவையில் இடம் பெறக்கூடாது. அரசியலில் ஊழல் இல்லாத, தூய்மையான தலைவர்களின் படம்தான் சட்டப்பேரவையில் வைக்க வேண்டும்.