“சாரணர் இயக்கத்துக்கு ஹெச்.ராஜாவை தலைவராக்க முயற்சி செய்வது கொடிய குற்றம்!” – முத்தரசன்

சாரணர் இயக்கத்தை காவிமயமாக்க தமிழக அரசு துணை போவது கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ” சாரண – சாரணியர் இயக்கத்தில் இந்நாள் வரை அரசியல் தலையீடு இருந்தது இல்லை. தற்போது காவி அரசியலை நுழைத்திட பாஜக மேற்கொண்டுள்ள முயற்சிக்கு தமிழ்நாடு அரசு அடிபணிந்தது அவலத்தின் உச்சமாகும்.

சத்தமில்லாமல் உடற்பயிற்சி போர்வையில் மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியில் மதவெறி அமைப்பு ஒளிந்து, மறைந்து செய்து வந்தது. தற்போது தமிழ்நாட்டில் மிக, மிக பலவீனமான ஆட்சி நடந்து கொண்டிருப்பதை பயன்படுத்தி தங்களின் நோக்கத்தை சட்டபூர்வமாக நிறைவேற்றிக் கொள்ள சாரண, சாரணிய இயக்கத்தை பாஜக பயன்படுத்திட முனைந்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அபாயம் குறித்து கவலைப்படாமல், கண்டு கொள்ளாமல் தங்களின் பதவி சுகம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமியின் அரசு துணையாய் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்துத்துவா வெறியரான எச்.ராஜா வை தலைவராக்கும் முயற்சிகளை யார் மேற்கொண்டாலும் கொடிய குற்றத்திற்கு துணை போனவர்களாக கருதப்படுவர்.

வாக்களிக்கும் தகுதி படைத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக்கல்வி அதிகாரிகள், மற்றும் ஆசிரியர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றலல்.

பலவீனமான மாநில ஆட்சியைப் பயன்படுத்தி தங்களை பலப்படுத்திக் கொள்ளும் வகுப்புவாத சக்திகளுக்கு தமிழக மக்கள் ஒரு போதும் துணை போனதும் இல்லை. போகவும் மாட்டார்கள் என்பது உறுதிசெய்யப்படும் என்று நம்புகிறோம்.

பலிபீடத்தில் சாய்ந்து விட்ட அதிமுக அரசுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.