’பேட்டரி இல்லாத டார்ச்லைட்’ கமல் கட்சி: ஒரு வார்டில்கூட வெற்றி பெறவில்லை!
நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள்நீதி மய்யம்’ என்ற கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த நான்கு ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை நடைபெற்றுள்ளன. இவற்றில் ஒரு இடத்தில்கூட கமல் கட்சி வெற்றி பெற இயலவில்லை.
சமீபத்தில் 12,700க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வழக்கம்போல் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்ட கமல் கட்சியினர், ஒரு வார்டில்கூட வெற்றி பெற முடியவில்லை. கமல் மேற்கொண்ட பரப்புரைகளும், முன்வைத்த முழக்கங்களும் வாக்காளர்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதையே தொடர் தோல்விகள் காட்டுகின்றன.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எப்போதும் போல தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகள் மட்டுமே அடுத்தடுத்த இடங்களைப பிடித்துள்ளன. அவற்றிலும் திமுக வரலாறு காணாத அமோக வெற்றியையும், அதிமுக சொற்ப வெற்றியையும் பெற்றுள்ளன.