“தங்க நகைகளுக்கு புதிய கட்டுப்பாடு இல்லை; பழைய நடைமுறை தொடரும்!” – மோடி அரசு

நரேந்திர மோடி அரசின் புதிய வரி மசோதா தொடர்பாக பல்வேறு குழப்பமான தகவல்கள் பரவி வருகின்றன. பரம்பரை நகைகள் உள்ளிட்ட தங்க நகைகள் மீது வரி விதிக்கப்படும் என்பது அவற்றில் ஒன்று.

இது தொடர்பாக மோடி அரசின் நிதியமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கம் வருமாறு:

வருமான வரி சட்ட திருத்த மசோதாவில் தங்க நகைகளுக்கு எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பழைய நடைமுறையே தொடரும்.

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு தனி நபரும் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது தொடர்பாக 1916-ன் கீழ் ஏற்கனவே உள்ள விதிகள் தொடரும். அதன்படி, திருமணமான பெண் அதிகபட்சமாக 500 கிராம் (அதாவது, அறுபத்தி இரண்டரை சவரன்) தங்கமும், திருமணமாகாத பெண் 250 கிராம் (அதாவது, முப்பத்தி ஒண்ணே கால் சவரன்) தங்கமும், ஒரு ஆண 100 கிராம் (அதாவது, பன்னிரெண்டரை சவரன்) தங்கமும் வைத்திருக்கலாம்.

அதே சமயம், மேற்சொன்ன வரம்புக்கு மேல் அதிகமாக தங்கம் வைத்திருப்பவர்கள், தங்கள் வருமான வரி கணக்குக்கு உட்பட்டு வைத்திருந்தால், அதாவது, கணக்கில் காட்டப்பட்ட பணத்தில் வாங்கியிருந்தால், அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட மாட்டாது.

அதேபோல, குடும்பத்தில் வழிவழியாக வந்த பரம்பரை நகைகள் மற்றும் பழைய தங்கக் கட்டிகளுக்கு வருமான வரி சட்ட திருத்த மசோதாவில்  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், வரியை நிர்ணயிக்கும் அதிகாரி, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அந்தஸ்து, அதன் பாரம்பரியம், பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், அந்த குடும்பம் சார்ந்த சமூகப் பிரிவு மற்றும் சில விவரங்களை பரிசீலித்து, அந்த குடும்பத்திற்குச் சொந்தமான பெரிய அளவிலான நகைகளை பறிமுதல் செய்வதா? பறிமுதல் செய்ய வேண்டாமா? என்பதை முடிவெடுக்கலாம். சோதனைக்கு உத்தரவிடும் வருமான வரி ஆணையர் / இயக்குநருக்கு சோதனை அறிக்கை அளிக்கும்போது, இந்த விவரங்களை அளிக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.