“உடனடியாக வேண்டும் மத்தியில் லோக்பால், மாநிலத்தில் லோக் ஆயுக்தா!” – மு.க.ஸ்டாலின்

ஊழலை ஒழிக்க மத்தியில் லோக்பால், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:-

ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறும் மத்திய அரசு லோக்பால் அமைப்பை ஏன் ஏற்படுத்தவில்லை என உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக காந்தியவாதி அன்னா ஹசாரே, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, புதுவை ஆளுநர் கிரண்பேடி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி பூஷன் ஆகியோர் ஆகஸ்ட் போராட்டமும், அதையொட்டி நிகழ்ந்த போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் அனைத்தும் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் ஊழலை முற்றிலும் ஒழிக்க லோக்பால் அமைப்பு வேண்டும் என வலியுறுத்தினார்கள். திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று 161-2014-ல் நடைமுறைக்கு வந்துவிட்டது.

ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை. லோக்பால் அமைப்பின் தலைவரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 5 பேர் குழு தேர்வு செய்ய வேண்டும். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால் 2-வது பெரிய கட்சியின் தலைவரை லோக்பால் தலைவர் தேர்வு குழுவில் இடம் பெறச் செய்வதற்கான திருத்தம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனால்தான் அவசரச் சட்டம் கொண்டு வந்த இந்த திருத்தங்களை நிறைவேற்றி லோக்பால் அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்ற தடுப்புச் சட்டம் திமுக ஆட்சியில் 5-4-1973-ல் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக்ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த அதிமுக அரசு மறுத்து வருகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி லோக்பால் அமைப்பு தேவையோ, அதுபோல மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு லோக் ஆயுக்தா அமைப்பு தேவை. எனவே, மத்தியில் லோக்பால், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்’.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.