‘ஜோக்கர்’ இயக்குனரிடம் ரஜினிகாந்த் உறுதி: “நிச்சயம் நாம் சந்திப்போம்!”

ராஜுமுருகன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, மு.ராமசாமி நடிப்பில் வெளிவந்துள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம், விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் முக்கிய அரசியல் தலைவர்கள், நேர்மையான அரசு அதிகாரிகள், ரஜினிகாந்த், தனுஷ், லிங்குசாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் ஆகியோரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இது குறித்து இயக்குனர் ராஜூமுருகன் கூறியிருப்பதாவது:

0a6g

ஜோக்கர்’ படத்தைப் பார்த்துவிட்டு யாரும் எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேபோல் எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. நான் பெரிதும் மதிக்கக்கூடிய, விரும்பக்கூடிய தலைவரான ஆர்.நல்லகண்ணு அய்யா ‘ஜோக்கரை’ பார்த்துவிட்டு, எனக்கு அழகான ஒரு பரிசை அளித்தார். அதில் அழகான ஒரு வாசகம் இருந்தது. அது: “விதைத்துகொண்டே இருப்போம். முளைத்தால் மரம், இல்லையென்றால் உரம்.”

அதேபோல், இன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்ககூடிய சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு, “சமூக அவலங்களுக்கு எதிரான சரியான படம்” என்று பாராட்டினார்.

சமூக தளத்தில் இயங்கி கொண்டிருக்ககூடிய தொல்.திருமாவளவன் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு பெரிதும் பாராட்டினர். இதை போன்று நான் விரும்பும் தலைவர்கள் பலர் படத்தை பார்த்துவிட்டு என்னை பாரட்டினர்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் படத்தை பார்த்துவிட்டு, “ரொம்ப ரொம்ப தில்லான படம். ரொம்ப நல்ல பண்ணிருக்கீங்க. நிச்சயம் நாம் சந்திப்போம்” என்றார்.

நான் என்னுடைய இயக்குநர் லிங்குசாமி அவர்களிடமிருந்து நிறைய கற்றுள்ளேன். ‘ஜோக்கர்’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் லிங்குசாமி, “ராஜு முருகன் என்னிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை. நான் தான் அவரிடமிருந்து கற்றுள்ளேன்” என்று கூறியது அவருடைய பெருந்தன்மையாகும்.

இவ்வாறு ராஜூமுருகன் கூறியுள்ளார்.