கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது: பிரான்ஸ் அரசு அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் இந்த விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் சிறந்த நடிப்பாற்றலை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுவதாக அது அறிவித்துள்ளது.

ஏற்கனவே நடிகர் சிவாஜி கணேசனுக்கு செவாலியர் விருது வழங்கி பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சகம் கவுரவித்துள்ளது. சிவாஜிக்கு அடுத்ததாக செவாலியர் விருது பெறும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனுக்கு  செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவருக்கு பல்லாயிரக்கணக்கில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

1960 ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது, ‘மூன்றாம் பிறை’, ‘நாயகன்’, ‘இந்தியன்’ ஆகிய படங்களுக்காக மூன்று முறை தேசிய விருதுகள், 18 பிலிம்பேர் விருதுகள். 1990ல் பத்மஸ்ரீ விருது, 2005ல் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம், 2014ல் பத்மபூஷன் விருது ஆகியவற்றை கமல் பெற்றுள்ளார்.

கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.