“ஆதாரம் காட்டுங்கள்; அல்லது ராஜினாமா செய்யுங்கள்”: நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் காந்தி கிடுக்கிப்பிடி!

“இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட் (எச்ஏஎல்) நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அரசு ஆர்டர்கள் கொடுத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும், அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

மேலும், விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பாஜக அரசு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ஒரு ரூபாய் அளவுக்குக் கூட ஒப்பந்தம் வரவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒரு பொய் கூறினால், அதைத் தொடர்ந்து அந்த ஒரு பொய்யை மறைக்க, பல பொய்களைக் கூற வேண்டியது இருக்கும். பிரதமர் மோடியின் ரஃபேல் பொய்யை மறைக்க நிர்மலா ஆர்வமாக இருக்கிறார். அதனால், நாடாளுமன்றத்தில் நிர்மலா பொய் கூறியுள்ளார். நாளை நாடாளுமன்றத்தில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான ஆர்டர்கள் குறித்த ஆவணங்களைக் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். அல்லது பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுங்கள்: என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Read previous post:
s1
“திமுகவின் வெற்றியை களவாடி விடலாம் என கணக்கு போடுகிறார்கள்”: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு: ஆங்கிலப் புத்தாண்டு 2019, நாம் அடுத்தடுத்து காணப்போகும் வெற்றிகளுக்கான ஆண்டாகப் பிறந்திருக்கிறது. முதல்

Close