மதுரை நிருபர்கள் வெளுத்த வெளுப்பில் பாதியில் எழுந்து சென்ற பொன்.ராதாகிருஷ்ணன்!

திருப்பரங்குன்றம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவற்காக வந்திருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதைச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்ன மத்திய அரசு, அதே உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது இதைச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை” என்று கூறாதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேட்டிருக்கிறாரே?

பதில்: ஜல்லிக்கட்டு எப்ப தடுக்கப்பட்டது? எந்த அரசாங்கத்தில் தடுக்கப்பட்டது? தமிழ் சமுதாயத்திற்கு துரோகம் இழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கக் கூடிய திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் ஜல்லிக்கட்டு தடுக்கப்பட்டது.

கேள்வி: அதன்பிறகு பாஜக ஆட்சி வந்ததே, ஜல்லிக்கட்டு நடத்த நீங்கள் என்ன செய்தீர்கள்?

பதில்: ஜல்லிக்கட்டு நடத்த எல்லா முயற்சிகளையும் செய்தோம். உச்சநீதிமன்றத்தில் தடை போட்டார்கள். அதையும் தாண்டி எப்படி நடத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, இரண்டாவது நாளே அப்படி உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று நீங்கள் (மத்திய அரசு) பதில் சொன்னீர்கள். ஆனால், ஜல்லிக்கட்டில் அந்த வேகம் இல்லையே?

பதில்: நாங்கள் இது இது பண்ணினோம் என்று ஒவ்வொரு விஷயமாக சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இந்த வருடம் கட்டாயம் ஜல்லிக்கட்டு நடக்கும்.

கேள்வி: கடந்த ஆண்டும் இப்படித்தான் சொன்னீர்கள். “இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும், மோடி பொங்கல் நடக்கும்” என்று. எதுவும் நடக்கவில்லையே?

பதில்: ஒரு வீட்டை கட்டுவது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த வீட்டை இடித்துத்தள்ளுவது எவ்வளவு எளிது என்பதும் உங்களுக்குத் தெரியும். அப்படி ஜல்லிக்கட்டு எனும் வீட்டை இடித்துத்தள்ளியது காங்கிரஸ் கட்சியும், திமுகவும். அதை கட்டுவதற்கு நாங்கள் முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறோம். அது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்குத்தான் தெரியும்.

கேள்வி: என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்களேன்.

பதில்: ஜல்லிக்கட்டு விஷயமாக ஒரு மாதத்திற்கு முன்பாகவே அந்தத்துறையின் அமைச்சர் ஜவடேகரை அவருடைய அலுவலகத்தில் ஒருமுறையும், அவரது வீட்டில் ஒருமுறையும் பார்த்துப் பேசியிருக்கிறேன். அமைச்சரவை கூட்டங்களில் பல முறை அவரைப் பார்த்திருக்கிறேன். எல்லா இடங்களிலும் நாம் சொல்வது, “இப்போது ஜல்லிக்கட்டுக்குக் கொடுக்கப்படுகிற அனுமதி நிரந்தரமாக இருக்க கூடிய வகையில் வேண்டும்” என்பது தான். பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மரியாதைக்குரிய அனந்தகுமார் அவர்களிடமும், இணை அமைச்சர்கள் அலுவாலியா, நக்வி ஆகியோரிடமும் பேசியிருக்கிறேன். இது என்ன சீட்டு விளையாட்டா? ஒவ்வொரு விஷயமாக உங்களிடம் சொல்வதற்கு…!

கேள்வி: உங்கள் அமைச்சரவையிலேயே ஜல்லிக்கட்டு பற்றி முரண்பாடான கருத்து இருக்கிறது. எப்படி சாதிப்பீர்கள்?

பதில்: யார் யாருக்கு எதிர்க்கருத்து இருக்கிறது?

நிருபர்: மேனகா காந்தி.

பொன்.ராதா: வேற யாருக்கெல்லாம் மாற்றுக் கருத்து இருக்கிறது?

நிருபர்: மேனகா காந்தி அமைச்சர்தானே?

பொன்.ராதா: நான் மந்திரி இல்லையா?

நிருபர்: மேனகா காந்தியும் மந்திரி தானே?

பொன்.ராதா: நான் மந்திரி தானய்யா. ஜவடேகர் மந்திரியா இல்லையா? பிரதம மந்திரி மோடி மந்திரியா இல்லையா? அவங்க மந்திரிதான? அப்ப விடுங்க.

நிருபர்: தமிழக அரசியலில் 50 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாற்றம் விரைவில் வரும் என்றும், தொண்டர்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கட்சிக் கூட்டத்தில் பேசியிருக்கிறீர்களே? அது என்ன மாற்றம்?

பதில்: (சமாளித்தபடி) திருப்பரங்குன்றம் தேர்தல் வாக்களிப்பில் ஏற்படுகிற மாற்றம் தான் அந்த மிகப்பெரிய மாற்றம். அந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மாற்றம் வரும் என்று தான் சொன்னேன்.

கேள்வி: மத்திய அரசு திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தை விட்டுப்போய்விட்டதாகச் சொல்கிறார்களே? உண்மையா?

பதில்: என்னைப் பொறுத்தவரையில் அது மதுரையில் அமைய வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். அதற்காக தொடர்ந்து நான் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இடம் தொடர்பாக பிரச்சினை இருக்கிறது. அந்தப் பிரச்சினையை எப்படி சரிசெய்வது என்பது பற்றியும் ஆலோசிப்போம். தமிழக அரசாங்கத்திற்கு என்னுடைய வேண்டுதல், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையக்கூடிய வகையில் நீங்கள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

கேள்வி: கடந்த 6 மாதங்களுக்கு முன்பே (17.2.2016), முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, மதுரை மாவட்டத்தில் தோப்பூர் ஆகிய ஊர்களை 2015 ஏப்ரல் மாதமே மத்தியக்குழு ஆய்வு செய்தது. இன்னமும் முடிவு அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த ஊரில் அமைக்கப்படும் என்ற விபரத்தை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தாரே? இதற்குப் பதில் என்ன?

பதில்: எந்த இடத்தில் மருத்துவமனை அமைக்கப்படும் என்று விரைவில் முடிவு செய்யப்படும். அதில் சின்ன பிரச்சினை இருக்கிறது.

கேள்வி: மத்திய அரசின் உதய் மின் திட்டத்தை தமிழக அரசு ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தது. “எங்களுடைய மோசமான அரசியல் எதிரிகள் கூட உதய் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தவிர அங்கு இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லை” என்று அந்தத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். அதேபோல மத்திய உணவு பாதுகாப்பு சட்டத்தையும் தமிழக அரசு கடுமையாக எதிர்த்தது. ஆனால், கடந்த 10 நாட்களில் இவ்விரு திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது?

பதில்: நல்ல விஷயங்கள் நடக்கிறபோது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கேள்வி: இந்த விஷயங்களைப் பொறுத்தவரையில், முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், தமிழக அரசை மத்திய அரசு மிரட்டிப் பணிய வைத்துவிட்டதாக தகவல்கள் வருகிறதே?

பதில்: இதுபற்றி தமிழக அரசு தான் விளக்கம் கொடுக்க வேண்டும். நான் கொடுக்கக் கூடாது. ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்தி விடுகிறேன். எந்த மாநில அரசையும், எந்த ஒரு சூழலிலும் மிரட்ட வேண்டிய அவசியம் மத்திய அரசாங்கத்திற்கு இல்லை.

கேள்வி: நியூட்ரினோ திட்டமும் தமிழகத்தை விட்டு வெளியேறிவிட்டதாக தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்திருக்கிறார். அது உண்மைதானா?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், கோபத்துடன் பாதிப்பேட்டியில் எழுந்து சென்றார், பொன்.ராதாகிருஷ்ணன். இதனால் செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Courtesy: tamil.thehindu.com