போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்தது பற்றி மோடி ஆணவத்துடன் பேசினார்: மேகாலயா ஆளுநர் குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீர் ஆளுநராக முதலில் நியமிக்கப்பட்டவர் சத்யபால் மாலிக். பின்னர் கோவா மாநில ஆளுநர் ஆனார். தற்போது அவர் மேகாலயா மாநில ஆளுநராக உள்ளார்.

அவர் அரியானா மாநிலம் தாத்ரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு சமூக நிகழ்வில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நான் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினேன். அவரிடம்,’ விவசாயிகள் போராட்டத்தில் 500 விவசாயிகள் இறந்துவிட்டனர்’ என்றேன். அதற்கு அவர் அதிக ஆணவத்துடன் ‘அவர்கள் எல்லோரும் எனக்காகவா இறந்தார்கள்?’ என்று கேட்டார்.

நான் அவரிடம், ’ஆமாம், நீங்கள் மன்னராக இருப்பதால் அவர்கள் இறந்தார்கள்’ என்று கூறினேன். அவர் உடனே ’நீங்கள் அமித்ஷாவை பாருங்கள்’ என்றார்.

நானும் அமித்ஷாவை பார்த்தேன். அமித்ஷாவோ, ‘ஒரு நாய் இறந்தால் கூட பிரதமர் இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்புகிறார்’ என்று கூறினார்.

இவ்வாறு சத்யபால் மாலிக் குறிப்பிட்டார்.

அவருடையை பேச்சை சுட்டிக் காட்டி காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ”இந்த ஒரு பேட்டி போதும் பிரதமரின் தற்பெருமை, கொடூர சிந்தனை மற்றும் உணர்வற்ற போக்கைக் காட்ட” என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

சத்யபால் மாலிக் பேச்சு அடங்கிய வீடியோவை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது. அதில், மேற்கூறிய வார்த்தைகளைப் பதிவிட்டு, ’இது ஜனநாயக நாடு கவனிக்க வேண்டிய விஷயம்’ என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய கருத்துகளுக்காக பணியிட மாறுதல்கள் நிகழும் என்றால் அதற்காக நான் சிறிதும் அஞ்சப்போவதில்லை என்று சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

 

Read previous post:
0a1a
சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை – விமர்சனம்

நடிப்பு: ருத்ரா, சுபிக்‌ஷா, வினோத் சாகர், சுப்புலட்சுமி இயக்கம்: மகேஷ் பத்மநாபன் இசை: ராஜேஷ் அப்புக்குட்டன் ஒளிப்பதிவு: பிஜு விஸ்வநாத் எப்படி வேண்டுமானாலும் “வளைந்துகொடுத்து’, தனது துறையில்

Close