“மைனர் மனைவியுடன் கணவர் பாலுறவு கொள்வது பலாத்காரத்துக்கு நிகரானது!” – உச்ச நீதிமன்றம்

‘இண்டிபெண்டன்ட் தாட்’ என்ற தொண்டு நிறுவனம் இந்திய சட்டத்தில் உள்ள முரண்பாடு ஒன்றை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தது.

“இந்திய தண்டனைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 375, உட்பிரிவு 2, ஒரு ஆண் தனது மனைவிக்கு 15 வயது பூர்த்தியாகி இருந்தால் அவருடன் உறவு கொள்ள அனுமதிக்கிறது. ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமான போஸ்கோ (POCSO), 18 வயதுக்குக் கீழ் உள்ள அனைவரையும் குழந்தைகள் எனக் குறிப்பிடுகிறது. அப்படி இருக்கும்போது, சட்டப்பிரிவு ஐபிசி 375 (2), 15 வயது பூர்த்தியான மைனர் மனைவியுடன் ஒரு கணவர் உறவு கொள்வதை அனுமதிப்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது; மைனர்களுக்கு சட்டத்தில் சமத்துவம் அளிக்காத நிலையை இது உருவாக்கும்” என்பது தான் அந்த பொது நல வழக்கு.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு,  18 வயது நிரம்பாத சிறுமியுடன் அவரது கணவரே பாலுறவு கொண்டாலும் அது பலாத்காரமே என்று ‘இண்டிபெண்டன்ட் தாட்’ தொண்டு நிறுவனம் முன்வைத்த வாதத்தை, விளக்கத்தை ஏற்றுக்கொண்டது.

இதனையடுத்து, மனைவி மைனர் பெண்ணாக, அதாவது 18 வயதுக்குக் கீழ் உள்ளவர் என்றால், அவருடன் கணவர் தாம்பத்ய உறவு கொள்வது பலாத்காரத்துக்கு நிகரானது என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஓராண்டுக்குள் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

“மனைவி மைனராக இருந்தால் அவருடன் கணவர் உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என சட்டத்தில் ஒரு விதிவிலக்கை அரசு ஏற்படுத்தியது ஏன்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினவினர்.

மேலும், “பிற விவகாரங்களில் முடிவெடுக்க 18-வயதே சரியான வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கணவருடன் பாலுறவு கொள்வதில் மட்டும் ஏன் இத்தகைய விதிவிலக்கு அனுமதிக்கப்பட்டது?” என்றும் நீதிபதிகள் வினவினர்.

“குழந்தை திருமணங்களைத் தடுக்க சட்டங்கள் இருந்தும் அத்தகைய திருமணங்கள் நடந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. 70 ஆண்டுகளாகியும் சட்டத்தை முழு வீச்சில் அமல்படுத்த முடியாதது வருத்தத்துக்குரியது” என்றும் நீதிபதிகள் கூறினர்.