‘மெர்சல்’ இயக்குனர் அட்லி தீபாவளி வாழ்த்து!

‘ராஜா ராணி’, ‘தெறி’ ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ‘மெர்சல்’ படத்தை தற்போது இயக்கி முடித்திருக்கும் இயக்குனர் அட்லி, செய்தியாளர்களுக்கு தனது அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்புக்கு தனது துணைவியும், நடிகையுமான கிருஷ்ணப்பிரியாவுடன் வந்து கலந்துகொண்ட அட்லி, ஒவ்வொரு செய்தியாளரையும் தனித்தனியே சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்.

0a1e

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “என் திருமணம், என் திரைப்பட முயற்சிகள் என என் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் அனைத்திலும் எனக்கு ஆதரவாக இருந்து, என்னோடு சேர்ந்து பயணிக்கும் செய்தியாளர்களுடன் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதற்காகவே இந்த சந்திப்பு. நான் இயக்கியுள்ள திரைப் படைப்பு இந்த தீபாவளிக்கு வருகிறது. இனிவரும் காலங்களில் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு என் படைப்புகள் வந்தாலும், வராவிட்டாலும் இந்த சந்திப்பு தொடரும்” என்றார்.

அட்லி தற்போது இயக்கி முடித்திருக்கும் ‘மெர்சல்’ படத்தில், நாயகனாக விஜய்யும், நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மிகுந்த பொருட்செலவில் தேனாண்டாள் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் 25ஆம் ஆண்டு படம், தேனாண்டாள் நிறுவனத்தின் 100-வது படம் ஆகிய சிறப்புகளைக் கொண்டுள்ள ‘மெர்சல்’, வருகிற தீபாவளியன்று (அக்டோபர் 18ஆம் தேதி) உலகெங்கும் சுமார் 3,500 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இப்படம் ‘அதிரிந்தி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.