சசிகலா தேர்தலில் போட்டியிட ஆயுள்கால தடை?: தேர்தல் ஆணையம் மனு!

கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:

கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஆயுள் தடையாக மாற்ற வேண்டும். மேலும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்து தேர்தல் ஆணையம் எந்த கருத்தையும் முன்வைக்க விரும்பவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், சசிகலா ஆயுள் முழுக்க தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.